குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் இந்த மாதம் இறுதிக்குள்ளாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யாரையெல்லாம் தக்க வைக்கலாம், யாரையெல்லாம் விடுவிக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அணியில் உள்ள தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியானது தலைமை பயிற்சியாளரை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
ஆஷிஷ் நெஹ்ரா உடனான குஜராத் டைட்டன்ஸ் அணியின் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் முடிந்த நிலையில் அவரை நீக்க டைட்டன்ஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி அணியின் இயக்குநரான விக்ரம் சோலாங்கியையும் நீக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் விக்ரம் சோலாங்கி ஆகியோரது தலைமையின் கீழ் குஜராத் டைட்டன்ஸ் 2022 அறிமுக சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது.
ஆனால், கடைசியாக 2024ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கூட வரவில்லை. டைட்டன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்தது. இந்த தொடரில் சுப்மன் கில் அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடலில் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது. புதிய தலைமை பயிற்சியாளருக்காக இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கிடம் இது குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய சாம்பியன்ஸ் அனியானது முதல் சீசனிலேயே டிராபியை கைப்பற்றியது.