
SA Vs AUS WTC Final: ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ரபாடாவின் பந்து வீச்சில் 212 ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.
138 ரன்னில் சுருண்ட தென்ஆப்பிரிக்கா
இதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா பந்து வீச்சில் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததை அடுத்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 74 ரன்கள் முன்னிலை பெற்று 2வது இன்னிங்சில் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி ரபாடா, நிகிடியின் அசுரதனமான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா திணறல்
ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணியை அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் மீட்டெடுத்தனர். 61 ரன்கள் எடுத்த எட்டாவது விக்கெட் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலியாவை 218 ரன்கள் முன்னிலைக்கு கொண்டு சென்றது. கேரி 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
பரபரப்பான கட்டத்தில் போட்டி
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. லியோன் 1 ரன்னுடன் ஸ்டார்க்குடன் களத்தில் உள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.