டிரம்பின் 'கோல்டன் விசா' இணையதளம்: 5 மில்லியன் டாலருக்கு அமெரிக்க குடியுரிமை!

Published : Jun 12, 2025, 11:11 AM ISTUpdated : Jun 12, 2025, 11:40 AM IST
trump gold card

சுருக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 5 மில்லியன் டாலர் மதிப்பிலான 'கோல்டன் விசா' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். TrumpCard.gov என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விசா அமெரிக்க குடியுரிமைக்கு வழிவகுக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது புதிய அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான (US residency permit) புதிய இணையதளத்தை புதன்கிழமை அன்று அறிமுகப்படுத்தினார். 'TrumpCard.gov' என்ற இந்த இணையதளத்தில், 5 மில்லியன் டாலர் மதிப்பிலான "கோல்டன் விசா" (Golden Visa) திட்டத்திற்கான காத்திருப்புப் பட்டியல் திறக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

"உலகிலேயே மிகப்பெரிய நாடாகவும், சந்தையாகவும் திகழும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எப்படிப் பதிவு செய்வது என்று ஆயிரக்கணக்கானோர் அழைப்புகள் விடுத்துக் கேட்டுள்ளனர்," என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில், தனது முகம் பொறிக்கப்பட்ட தங்க நிற மாதிரியைக் காட்டி, இந்த சிறப்பு அனுமதி "இரண்டு வாரங்களுக்குள்" கிடைக்கும் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

'டிரம்ப் கார்டு' விரைவில் வருகிறது!

தற்போது விசாக்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்றாலும், புதன்கிழமை அன்று தொடங்கப்பட்ட இந்த இணையதளம், "டிரம்ப் கார்டு விரைவில் வருகிறது" என்ற தலைப்பின் கீழ், ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பெயர், விரும்பிய விசா வகை மற்றும் மின்னஞ்சல் முகவரியைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது.

பாரம்பரிய "கிரீன் கார்டின்" (Green Card) உயர் விலைப் பதிப்பான இந்த புதிய விசா, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களை ஈர்க்கும் என்றும், அமெரிக்காவின் தேசிய பற்றாக்குறையைக் குறைக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் டிரம்ப் முன்னதாக தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, போராட்டங்கள் அதிகரித்து வரும் சூழலிலும், டிரம்பின் நிர்வாகம் தனது குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியான சட்டப் போராட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் சூழலிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த புதிய கார்டு, மிகவும் மதிப்புமிக்க அமெரிக்க குடியுரிமைக்கு வழி வகுக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், தனது நிர்வாகம் "ஒரு மில்லியனுக்கும்" அதிகமான கார்டுகளை விற்க நம்புவதாகவும், ரஷ்ய கோடீஸ்வரர்களும் தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹெய்டன் நிர்வாணமாக நடப்பதை தடுத்த ஜோ ரூட்..! கண்களை காப்பாற்றி விட்டதாக ஹெய்டன் மகள் நன்றி!
ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!