
இந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது.
உலகம் முழுதும் ஐபிஎல்லை போல் பிக்பேஷ் லீக்(ஆஸ்திரேலியா), கனடா பிரீமியர் லீக், கரீபியன் டி20 லீக்(வெஸ்ட் இண்டீஸ்), பாகிஸ்தான் சூப்பர் லீக், தென்னாப்பிரிக்க டி20 லீக், வங்கதேச பிரீமியர் லீக், லங்கா பிரீமியர் லீக் என பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும் ஐபிஎல் தான் உலகின் அதிக பணம்புழங்கும் மற்றும் மிகப்பிரபலமான டி20 லீக் தொடர் ஆகும்.
ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருவதால் மகளிர் பிரீமியர் லீக் தொடரும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் முறையாக இந்த ஆண்டு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன. வரும் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கான ஏலம் கடந்த மாதம் நடந்தது.
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் ஆடும் 5 அணிகளுக்கும் கேப்டன்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். எந்தெந்த அணிக்கு யார் யார் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் என்று பார்ப்போம்.
மும்பை இந்தியன்ஸ்:
கேப்டன் - ஹர்மன்ப்ரீத் கௌர்
தலைமை பயிற்சியாளர் - சார்லோட் எட்வர்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
கேப்டன் - ஸ்மிரிதி மந்தனா
தலைமை பயிற்சியாளர் - பென் சாயர்
டெல்லி கேபிடள்ஸ்:
கேப்டன் - மெக் லானிங்
தலைமை பயிற்சியாளர் - ஜோனாதன் பேட்டி
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
கேப்டன் - பெத் மூனி
தலைமை பயிற்சியாளர் - ரேச்சல் ஹைன்ஸ்
யுபி வாரியர்ஸ்:
கேப்டன் - அலைஸா ஹீலி
தலைமை பயிற்சியாளர் - ஜோன் லூயிஸ்
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆடும் 5 அணிகளில் 2 அணிகள் தான் இந்திய வீராங்கனைகளை கேப்டனாக நியமித்துள்ளது. டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 3 அணிகளும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை கேப்டனாக நியமித்துள்ளன.