கோலி கோலி என்று ரசிகர்கள் கோஷமிட்ட நிலையில், தான் நடுவிரலை காட்டியது ஏன் என்பது குறித்து கௌதம் காம்பீர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் கௌதம் காம்பீர் சர்ச்சைக்கு பெயர் போனவராக மாறி வருகிறார். இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் கூட 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கூட தோனி அடித்த சிக்ஸரால் மட்டுமே இந்தியா வெற்றி பெறவில்லை என்றும், அதன் பின்னால், இந்திய வீரர்களின் கடின உழைப்பு இருக்கிறது என்றும் விமர்சனம் வைத்திருந்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது கூட விராட் கோலி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அன்று முதல் இந்த விமர்சனம் இன்னும் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து கௌதம் காம்பீர் முன்பு, கோலி கோலி என்று ரசிகர்கள் கோஷமிடுவதும், அதற்கு கௌதம் காம்பீர் கோபமடைந்து விமர்சனம் செய்வதும் நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் நட்பாக பழகி வந்ததை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், தான் கௌதம் காம்பீர் வர்ணனையாளராக பணியாற்றிய போது, தனது செல்போனில் பேசிக் கொண்டபடியே மைதானத்தை விட்டு வெளியேறி சென்றார். அப்போது, ரசிகர்கள் பலரும் கோலி கோலி என்று கோஷமிட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கௌதம் காம்பீர் ரசிகர்களை நோக்கி நடுவிரலை காட்டியபடி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தான் தற்போது அதற்கான விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ரசிகர்கள் அனைவரும் இந்தியாவிற்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அவர்கள் காஷ்மீர் குறித்தும் கோஷமிட்டனர். ஒரு இந்தியனாக என் நாட்டைப் பற்றி யார் தவறாக பேசினாலும், என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சமூக வலைதளங்களில் பார்ப்பது எல்லாம் முழுமையான செய்தி கிடையாது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.