டி20 உலகக் கோப்பை 2024 தொடரை ரோகித் சர்மா வென்று கொடுத்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். இது குறித்து பேசிய ரோகித் சர்மா கூறியிருப்பதாவது: இதுதான் என்னுடைய கடைசி டி20 போட்டி. இந்த பார்மேட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததிலிருந்து நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன்.
இந்த பார்மேட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதனுடைய ஒவ்வொரு அசைவையும் நான் ரசித்தேன். இந்த பார்மேட் மூலமாக இந்திய அணிக்காக நான் விளையாட ஆரம்பித்தேன். நான் டிராபியை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
ரோகித் சர்மாவிற்கு முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டி20 கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த நிலையில் அவருக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்தும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேப்டனாக செயல்படும் வீரர் பற்றிய கேள்வி தற்போது எழுந்துள்ளது.
வரும் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இலங்கை நடத்துகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கான கேப்டன்களின் பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா:
டி20 கிரிக்கெட்டுக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது. கடந்த சில தொடர்களில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். ஆதலால், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜஸ்ப்ரித் பும்ரா:
இந்திய கிரிக்கெட்டின் மகுடமான ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு கேப்டனாகக் கூடிய அனைத்து தகுதிகளும் உள்ளது. ஏற்கனவே சில டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும், அவரது சிறப்பான பந்து வீச்சு காரணமாக கேப்டனுக்கான சிறந்த உந்துதலாக இருக்கலாம். பல போட்டிகளில் ஆட்டநாயகன் விருதும், பல தொடர்களில் தொடர் நாயகன் விருதும் வென்றுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்:
கேப்டன் வாய்ப்புக்கான மற்றொரு பெயர் சூர்யகுமார் யாதவ். அமைதியான, சிறந்த பேட்ஸ்மேனுக்கான சிறப்பு பெற்றவர். அமைதியான ஒரு கேப்டனை தேர்வு செய்ய விரும்பினால், அதற்கு சூர்யகுமார் யாதவை பரிசீலினை செய்யலாம். ஒரு சில தொடர்களில் கேப்டனாகவும் தனது சிறப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரிஷப் பண்ட்:
ரிஷப் பண்ட் பெயரும் டி20 உலகக் கோப்பை தொடர் கேப்டனுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது. ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனை கேப்டனாக தேர்வு செய்ய விரும்பினால், அதற்கு சிறந்த தேர்வாக ரிஷப் பண்ட் இருப்பார். ஐபிஎல் தொடர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.