ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றிய நிலையில் எம்.எஸ்.தோனி தனது இன்ஸ்டாகிராம் மூலமாக வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.
அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் இருவரும் விளையாடினர். இதில், பும்ரா கடைசியில் யான்சென் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கேசவ் மஹராஜ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வந்த கஜிஸோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டி உள்பட இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது.
MS Dhoni has a special message for the -winning ! ☺️ 🏆 | pic.twitter.com/SMpemCdF4Q
— BCCI (@BCCI)
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்ற இந்திய அணிக்கு தோனி வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை சாம்பியன். என் இதயத்துடிப்பே எகிறிடுச்சு. அமைதியாக, தன்னம்பிக்கையுடன் நீங்கள் என்ன செய்ய நினைத்தீர்களோ அதனை நன்றாக செய்து முடித்தீர்கள். உலகக் கோப்பையை வீட்டிற்குக் கொண்டு வந்ததற்கு, தாயகம் திரும்பிய அனைத்து இந்தியர்களிடமிருந்தும், உலகில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் நன்றி. வாழ்த்துக்கள். விலைமதிப்பற்ற பிறந்தநாள் பரிசுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஜூலை 7 ஆம் தேதி தோனி தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக தனக்கு பிறந்தநாள் பரிசாக டிராபியை வென்று கொடுத்த இந்திய அணிக்கு வாழ்த்தும், நன்றியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.