தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்திய அணி டிராபியை வென்ற நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தடுத்து சர்வதேச டி20 போட்டியிலிருந்து ஓய்வு அறிவித்தனர்.
ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கொஞ்ச நேர இடைவெளியிலேயே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வு அறிவித்ததாக இருவருமே கூறினர்.
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் அறிமுகம்:
விராட் கோலி இந்திய அணிக்கு வருவதற்கு முன்னதாகவே ரோகித் சர்மா இந்திய அணியில் அறிமுகமானார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா, முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் சாதனைகள்:
இதுவரையில் 159 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 4231 ரன்கள் குவித்துள்ளார். இதில், 5 சதங்களும், 20 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 121 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா கேப்டன்ஸி சாதனைகள்:
மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு தற்போது வரையில் 62 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள ரோகித் சர்மா 48 டி20 போட்டிகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.இதே போன்று, 12 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. இதன் மூலமாக ரோகித் சர்மாவின் வெற்றி சதவிகிதம் 78.33 சதவிகிதமாக உள்ளது.
9 முறை டி20 உலகக் கோப்பை:
ரோகித் சர்மா 9 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இடம் பெற்று விளையாடியுள்ளார். முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார்.
ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது டி20 கிரிக்கெட்:
ரோகித் சர்மா விளையாடிய 159 டி20 போட்டிகளில் 14 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். 2 முறை மட்டுமே தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
டி20 கிரிக்கெட் ஓய்வு – ரோகித் சர்மா பேச்சு:
இதுதான் என்னுடைய கடைசி டி20 போட்டி. இந்த பார்மேட் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததிலிருந்து நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தேன். இந்த பார்மேட்டிலிருந்து விடை பெறுவதற்கு இதைவிட சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதனுடைய ஒவ்வொரு அசைவையும் நான் ரசித்தேன். இந்த பார்மேட் மூலமாக இந்திய அணிக்காக நான் விளையாட ஆரம்பித்தேன். நான் டிராபியை வெல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
விராட் கோலி டி20 கிரிக்கெட் அறிமுகம்:
முதல் முறையாக 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 125 டி20 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 4188 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 122* ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதமும், 38 அரைசதமும் அடங்கும்.
விராட் கோலி கேப்டன்ஸி சாதனைகள்:
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் 50 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ள விராட் கோலி 30 போட்டிகளுக்கு வெற்றியும், 16 போட்டிகளுக்கு தோல்வியும் தேடிக் கொடுத்துள்ளார். மேலும், 2 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 2 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
விராட் கோலி 6 டி20 உலகக் கோப்பை தொடர்கள்:
விராட் கோலி இதுவரையில் 6 முறை டி20 உலகக் கோப்பை தொடர்களில் இடம் பெற்று விளையாடியுள்ளார். முதல் முறையாக கடந்த 2012 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாடினார். இதுவரையில் டி20 உலகக் கோப்பை தொடர்களில் விராட் கோலி எடுத்த ரன்கள்:
T20 உலகக் கோப்பை 2012 — 5 போட்டிகள் 185 ரன்கள்
T20 உலகக் கோப்பை 2014 — 6 போட்டிகள், 319 ரன்கள்.
T20 உலகக் கோப்பை 2016 — 5 போட்டிகள், 273 ரன்கள்.
T20 உலகக் கோப்பை 2021 — 5 போட்டிகள், 68 ரன்கள்.
T20 உலகக் கோப்பை 2022 — 6 போட்டிகள், 296 ரன்கள்.
T20 உலகக் கோப்பை 2024 — 8 போட்டிகள், 151 ரன்கள்.
விராட் கோலி டி20 கிரிக்கெட் ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது:
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 125 டி20 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 17 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். மேலும், அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். இதே போன்று 50 சீரிஸ்களில் 7 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் விராட் கோலி தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
டி20 கிரிக்கெட் ஓய்வு – விராட் கோலி பேச்சு:
டி20 ஓய்வு குறித்து விராட் கோலி கூறியிருப்பதாவது: இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை. இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். கடவுள் மிகப்பெரியவர். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். டி20 உலகக் கோப்பையை ஜெயிக்க விரும்பினோம். அதன்படியே நடந்துள்ளது. நாம் தோற்றாலும் நான் அறிவிக்கப் போவதில்லை. அடுத்த தலைமுறை டி20 விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று ஐபிஎல்லில் அவர்கள் விளையாடுவதைப் போன்று அற்புதங்களைச் செய்ய வேண்டும்.
இந்திய அணியை இங்கிருந்து மேலும் கொண்டு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐசிசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீண்ட காலமாக காத்திருந்தோம். ரோகித் சர்மா 9 முறை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இது எனது 6ஆவது டி20 உலகக் கோப்பை. போட்டிக்கு பிறகு நான் உணர்ந்த உணர்ச்சிகளை விளக்குவது கடினம். நான் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தேன் என்பது எனக்கு தெரியும். கடந்த சில போட்டிகளில் நான் விளையாடியதைப் பார்த்து எனக்கு என் மீது நம்பிக்கை இல்லை.
ஆனால், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கும் போது உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் சிறப்பாக விளையாட நேரிடும். அதனால்தான் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு அற்புதமான நாள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.