டி20 உலகக் கோப்பை டிராபி வென்று சாம்பியனான இந்திய அணிக்கு பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்த நிலையில் பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் கூறியிருந்தார். ஓய்வறைக்கு சென்ற மோடி, அங்கு ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், முகமது ஷமி என்று ஒவ்வொரிடமும் தனித்தனியாக பேசி ஆறுதல் கூறினார்.
ஆனால், தற்போது டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
CHAMPIONS!
Our team brings the T20 World Cup home in STYLE!
We are proud of the Indian Cricket Team.
This match was HISTORIC. 🇮🇳 🏏 🏆 pic.twitter.com/HhaKGwwEDt
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.
அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் மார்கோ யான்சென் இருவரும் விளையாடினர். இதில், பும்ரா கடைசியில் யான்சென் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
அதன் பிறகு கேசவ் மஹராஜ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வந்த கஜிஸோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டி உள்பட இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில் தான் டிராபியை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: டி20 உலகக் கோப்பையை ஸ்டைலாக வீட்டிற்கு கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.