Latest Videos

கண்ணீர் விட்டு அழுத ரோகித் சர்மா – ராகுல் டிராவிட்டுக்காக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்த இந்தியா!

By Rsiva kumarFirst Published Jun 30, 2024, 12:04 AM IST
Highlights

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ராகுல் டிராவிட்டுக்காக டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று கொடுத்துள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி பார்படாஸில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது.

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அக்‌ஷர் படேல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். அக்‌ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்கவே, விராட் கோலி கடைசி வரை விளையாடி 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் மற்றும் குயீண்டன் டி காக் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 2ஆவது ஓவரில் பும்ரா பந்தில் ஹெண்ட்ரிக்ஸ் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஸ்டப்ஸ் 31 ரன்னில் அக்‌ஷர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி நிதானமாக ஆரம்பித்தார். போட்டியின் 12.3ஆவது ஓவரில் டி காக் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து டேவிட் மில்லர் களமிறங்கி அதிரடி காட்டினார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய கிளாசென் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசியில் அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதுவரையில் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக இருந்த போட்டியானது கிளாசெனின் விக்கெட்டிற்கு பிறகு இந்தியாவின் பக்கம் திரும்பியது. அடுத்து வந்த மார்கோ யான்சென் 2 ரன்களில் நடையை கட்டவே அடுத்து கேசவ் மஹராஜ் களமிறங்கினார்.

மிகவும் பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டேவிட் மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரில் முதல் பந்திலேயே சிக்ஸருக்கு முயற்சித்த மில்லர், சூர்யகுமாரின் அபாரமான கேட்சால் ஆட்டமிழந்தார். 2ஆவது பந்தில் ரபாடா பவுண்டரி அடித்தார். 3ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க, 4 ஆவது பந்திலும் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தை வைடாக வீசினார் பாண்டியா. மீண்டும் வீசப்பட்ட 5அவது பந்தில் ரபாடா ஆட்டமிழக்க, கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்படவே இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக சாம்பியனானது.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்த தொடரில் விளையாடிய எல்லா போட்டியிலும் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை டிராபியை வென்று தனி முத்திரை பதித்துள்ளது. 

அதுமட்டுமின்றி இன்றுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியும் நிலையில் அவருக்கு இதைவிட வேறு எதுவும் பெரிய நினைவுப்பரிசாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு ராகுல் டிராவிட் அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் ரோகித் சர்மா மைதானத்திலேயே படுத்து முத்தமிட்டுள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியாவிற்கு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இதன் மூலமாக இந்தியாவின் 17 ஆண்டுகால கனவு இன்று நிறைவேறியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு வந்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!