சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம், கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திருவிழா போன்று தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த தொடரில் சில அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டதைப் போன்று சிஎஸ்கே அணியின் கேப்டனும் மாற்றப்பட்டுள்ளார்.
19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி:
கடந்த ஆண்டு ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தது. 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே சிஎஸ்கே அணியானது ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம்:
இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதலில் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது தலைமையிலான சிஎஸ்கே அணியானது தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
தொடர் தோல்விகளுக்கு பிறகு கேப்டனாக எம்.எஸ்.தோனி பொறுப்பேற்றார். மேலும் இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவிற்கு வழங்கப்படவில்லை.
அஜிங்க்யா ரஹானே:
இதே போன்று அணியின் அனுபவ வீரரான அஜிங்க்யா ரஹானேவிற்கும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த சீசனில் மட்டுமே சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்தார். ஆதலால், அவர் மீது அணி நிர்வாகம் போதுமான நம்பிக்கை வைக்கவில்லை. அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் தனது தலைமையிலான மும்பை அணியை 42ஆவது முறையாக ஜெயிக்க வைத்து டிராபி வென்று கொடுத்தார்.
எம்.எஸ்.தோனியின் சகாப்தம்:
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனி இருந்து வருகிறது. இதில் அவர் விளையாடிய 235 போட்டிகளில் விளையாடி 141 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்துள்ளார். சிஎஸ்கேயில் தோனியின் வெற்றி சதவிகிதம் – 60.42 ஆகும். ஒரு கேப்டனாக 100 போட்டிகளுக்கும் மேல் சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே 5 முறை டிராபியை வென்றுள்ளது.
தோனி ஓய்வு?
இந்த நிலையில் தான் இந்த சீசனுடன் தோனி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அதற்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனை நியமித்து தோனி அணியின் இருக்கும் போதே அவருக்கு பயிற்சி அளித்திட வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே நிர்வாகம் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் கேப்டன்களின் பட்டியல்:
கடந்த 2008 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணியில் சில கேப்டன்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
எம்.எஸ்.தோனி – 2008 முதல் 2023 வரை – 235 போட்டிகள் – 142 வெற்றி, 90 தோல்வி, ஒரு போட்டி டை- வெற்றி சதவிகிதம் 60.42.
சுரேஷ் ரெய்னா - 2010 முதல் 2019 வரை – 6 போட்டிகள் – 2 வெற்றி, 3 தோல்வி, ஒரு போட்டி டை – வெற்றி சதவிகிதம் 33.33
ரவீந்திர ஜடேஜா – 2022 – 8 போட்டிகள் – 2 வெற்றி, 6 தோல்வி – வெற்றி சதவிகிதம் 25.
தற்போது ருதுராஜ் கெய்க்வாட் 2024 முதல் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.