
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
2வது டெஸ்ட் கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 302 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 2 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த பாகிஸ்தான் அணியை, பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து மீட்டனர்.
பாபர் அசாம் 75 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடி சதமடித்த ஃபவாத் ஆலம் 124 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. 9 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் அடித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான். 2ம் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை முடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி அபாரமாக பந்துவீசி 150 ரன்களுக்கு சுருட்டினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி, 6 விக்கெட் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் யாருமே சரியாக ஆடாததால், 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 152 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் வீரர்கள், அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். 27.2 ஓவரில் 176 ரன்களை விரைவாக சேர்த்தனர் பாகிஸ்தான் வீரர்கள். 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்து, 329 ரன்கள் என்ற இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்தது.
329 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர் பவல் மட்டுமே ஆட்டமிழந்திருக்கும் நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 280 ரன்கள் தேவை. வெஸ்ட் இண்டீஸின் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் பாகிஸ்தான் ஜெயிகலாம். கடைசி நாளில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால், கடைசி நாள் ஆட்டம் மிக சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது.