ரொம்ப ஒல்லியா இருக்கீங்க தம்பி.. நீங்க கொஞ்சம் வெயிட் போடுங்க..! இந்திய வீரருக்கு சல்மான் பட் அறிவுரை

By karthikeyan VFirst Published Aug 23, 2021, 9:43 PM IST
Highlights

ஹர்திக் பாண்டியா மிகவும் மெலிவாக இருப்பதால் தான் அடிக்கடி காயமடைவதாகவும், அதனால் கொஞ்சம் சதை போட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார்.
 

இந்திய அணியில் கபில் தேவுக்கு பிறகு கிடைத்த சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. மிரட்டலான பவுலிங், அசத்தலான ஃபீல்டிங், அதிரடி பேட்டிங் என அனைத்துவகையிலும்  அணிக்காக பங்களிப்பு செய்யக்கூடிய மதிப்புமிகு வீரர் ஹர்திக் பாண்டியா.

இந்திய அணியில் இடம்பிடித்த ஆரம்ப கட்டத்திலேயே, அணியின் அசைக்க முடியாத சக்தியாகவும் நிரந்தர வீரராகவும் உருவெடுத்தார் ஹர்திக் பாண்டியா. அவரது கிரிக்கெட் கெரியருக்கு பெரிய பிரச்னையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை. அந்த தொடரில் அவரது முதுகுப்பகுதியில் காயமடைந்ததையடுத்து, அதிலிருந்து மீண்டுவர அவருக்கு அதிக காலம் தேவைப்பட்டது.

அந்த காயத்திலிருந்து மீண்டு வந்தாலும், அவரால் முன்புபோல் பவுலிங் போடமுடியவில்லை. ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதுதான் அவருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க காரணமே. அப்படியிருக்கையில், அவர் பவுலிங் போடமுடியாதது, இந்திய அணியில் அவரது இடத்தை நிரந்தரமற்றதாக்கியது. ஆனாலும் அவர் சிறந்த வீரர் என்பதால் இந்திய அணியில் எடுக்கப்படுகிறார். ஆனால், அவர் எப்போது மீண்டும் பழையபடி பந்துவீசுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ள சல்மான் பட், ஹர்திக் பாண்டியா மீது இந்திய அணி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. பேட்டிங்கில் மிகுந்த திறமை வாய்ந்தவர். காயமடைவதற்கு முன், பாண்டியா நல்ல வேகத்தில் அருமையாக வீசினார். ஆனால் ஹர்திக் பாண்டியா மிகவும் மெலிவாக இருப்பதுதான் பெரிய பிரச்னை. அதனால் தான் அதிகமாக காயமடைகிறார். எனவே அவர் சற்று சதை போட வேண்டும். சதை போட்டால் மேலும் சிறந்த வீரராக ஜொலிப்பார் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

click me!