இந்தியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களும் எடுத்தனர். பின்னர் 183 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில், இந்தியா 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்யவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 364 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. 4 நாட்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழந்து 76 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர், 5ஆவது நாள் போட்டி நேற்று நடக்க இருந்தது. ஆனால், மோசமான வானிலை, மேகமூட்டம் மற்றும் மழையின் காரணமாக 5ஆவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டு 2ஆவது டெஸ்ட் போட்டி டிரா செய்யப்பட்டது. இதன் மூலமாக இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் வழங்கப்பட்டது.
டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதல் போட்டி வரும் 27 ஆம் தேதி பார்படாஸில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தொடருக்கு ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கோலஸ் பூரன், மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் எம்.ஐ. நியூயார்க் அணிக்காக விளையாடி கொண்டிருப்பதால், அவர் இந்த தொடரில் இடம் பெறவில்லை.
இதே போன்று டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விளையாடிய ஜேசன் ஹோல்டரும் இந்த ஒரு நாள் தொடரில் இடம் பெறவில்லை. மாறாக, அதிரடி வீரரான ஷிம்ரான் ஹெட்மயர் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், வேகப்பந்து வீச்சாளரான ஓஷேன் தாமஸூம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ், லெக் ஸ்பின்னர் யானிக் கரியா மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டி உட்பட மூன்று வீரர்கள் தங்கள் காயங்களில் இருந்து குணமடைந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் தொடருக்கான டீம்:
ஷாய் ஹோப் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ்,ஷிம்ரான் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்
கூடுதல் வீரர்கள்:
டென்னிஸ் புல்லி, ரோஸ்டன் சேஸ், மெக்கென்னி கிளார்க், கவேம் ஹாட்ஜ், ஜெய்ர் மெக்கலிஸ்டர், ஓபேட் மெக்காய், கெவின் விக்காம்