
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 93 ரன்களுக்கு, ருதுராஜ், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா ஆகிய 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவ் - வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரின் காட்டடி ஃபினிஷிங்கால் கடைசி 5 ஓவரில் 86 ரன்களை குவிக்க, 20 ஓவரில் இந்திய அணி 185 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசினார்.
இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் 6 ரன்னிலும், ஷேய் ஹோப் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் இருவரையும் வீழ்த்திய தீபக் சாஹர், அவரது 2வது ஓவரின் கடைசி பந்தை வீசும்போது காலில் காயம் ஏற்பட்டு களத்தை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர், கடந்த போட்டியை போலவே பவலும் பூரனும் இணைந்து அதிரடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்த ஆரம்பித்தனர். ஆனால் அவர்களை நிலைக்கவிடாமல் பவலை 25 ரன்னில் ஹர்ஷல் படேல் வெளியேற்றினார். பொல்லார்டும் 5 ரன்னில் ஆட்டமிழக்க, பூரனுடன் ஹோல்டர் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.