
இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. ரோஹித் சர்மா டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரஹானே, புஜாரா, இஷாந்த் சர்மா, ரிதிமான் சஹா ஆகிய சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
ரஹானே, புஜாரா ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சரியாக ஆடாமல் சொதப்பிவருகின்றனர். மிடில் ஆர்டரில் அவர்களது மோசமான பேட்டிங், இந்திய அணியை கடுமையாக பாதிக்கிறது. போட்டியின் முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர்.
அதேபோல பும்ரா, ஷமி ஆகிய 2 சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு அடுத்து சிராஜ், பிரசித் கிருஷ்ணா என இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் வரிசைகட்டி நிற்பதால், இஷாந்த் சர்மாவிற்கும் இனி அணியில் இடமிருக்க வாய்ப்பில்லை. அதேபோலத்தான் விக்கெட் கீப்பரும்.. ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவருக்கு மாற்றாக கேஎஸ் பரத் உருவாக்கப்படுகிறார். எனவே டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு சில அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மிகத்திறமையான விக்கெட் கீப்பராக இருந்தும் கூட இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடிக்க முடியாத ரிதிமான் சஹாவின் கிரிக்கெட் கெரியர் முடிந்துவிட்டது. அதை தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே தன்னிடம் சூசகமாக கூறியதை வெளிப்படுத்தியுள்ளார் சஹா.
ராகுல் டிராவிட் தன்னிடம் பேசியது குறித்து பேசிய ரிதிமான் சஹா, நான் உன்னிடம் இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை ரிதி.. இளம் விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் இணைந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள்(சஹா) எங்களது முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பர் இல்லை. எனவே இளம் விக்கெட் கீப்பரை வளர்த்தெடுக்க இதுவே சரியான தருணம் என்று என்னிடம் (சஹா) கூறினார் ராகுல் டிராவிட். நான், சரி.. ஒன்றும் பிரச்னையில்லை என்றேன்.
இலங்கைக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் நீங்கள்(சஹா) இடம்பெறவில்லை என்றால் அதிர்ச்சியடைந்து விடாதீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் முடிவு எடுக்கவேண்டும் என்றால் எடுக்கலாம் என்று டிராவிட் கூறினார். ஆனால், நான் ஓய்வுபெறும் ஐடியா எல்லாம் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். கிரிக்கெட் ஆட எனக்கு பிடிக்கும் என்பதால் தான் நான் கிரிக்கெட் ஆடுகிறேன். எனவே நான் தொடர்ந்து ஆடுவேன். நீங்கள்(இந்திய அணி நிர்வாகம்) என்னை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்றால் அது உங்களது முடிவு என்று கூறிவிட்டதாக சஹா தெரிவித்துள்ளார்.