பிராவோ, ரசலின் சாமர்த்தியமான பவுலிங்கால் கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி..! போராடி தோற்ற வங்கதேசம்

By karthikeyan VFirst Published Oct 29, 2021, 8:12 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் முதலிரண்டு போட்டிகளிலுமே தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச அணிகள், முதல் வெற்றியை எதிர்நோக்கி இன்று மோதின.

ஷார்ஜாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. நூருல் ஹசன் மற்றும் நசும் அகமது ஆகிய 2 வீரர்களுக்கு பதிலாக சௌமியா சர்க்கார் மற்றும் டஸ்கின் அகமது ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். 

வங்கதேச அணி:

சௌமியா சர்க்கார், முகமது நைம், லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மஹெடி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில்  லெண்டல் சிம்மன்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஸ்டான் சேஸும்,  ஹைடன் வால்ஷ் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர் அணியில் சேர்க்கப்பட்டனர். 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ், ரோஸ்டான் சேஸ், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், கைரன் பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிராவோ, அகீல் ஹுசைன், ரவி ராம்பால்.

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி மறுபடியும் பேட்டிங்கில் சொதப்பியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் எவின் லூயிஸ்(6) மற்றும் கிறிஸ் கெய்ல்(4) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பவர்ப்ளேயில் படுமட்டமாக பேட்டிங் ஆடியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஹெட்மயர்(9), ரசல்(0) ஆகிய 2 அதிரடி வீரர்களும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரோஸ்டான் சேஸ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை மெது மெதுவாக உயர்த்தினார். இதற்கு முந்தைய போட்டிகளில் ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த நிகோலஸ் பூரன், இந்த போட்டியில் ஷார்ஜாவில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

22 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 40 ரன்களை குவித்து 19வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழக்க, அடுத்த பந்திலேயே ரோஸ்டான் சேஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ஹோல்டர் 2 சிக்ஸரும், பொல்லார்டு ஒரு சிக்ஸரும் விளாச, 20 ஓவரில் 142 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 143 ரன்கள் என்ற இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது.

143 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக முகமது நைம் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் இறங்கினார்கள். ஷகிப் அல் ஹசன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். முகமது நைமும் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் லிட்டன் தாஸுடன் இணைந்து நன்றாக ஆடிய சௌமியா சர்க்காரும் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சீனியர் வீரரான முஷ்ஃபிகுர் ரஹீம் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய லிட்டன் தாஸ் 19வது ஓவரின் கடைசி பந்தில் 44 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் கேப்டன் மஹ்மதுல்லா களத்தில் நின்றதால் வங்கதேச அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் 19வது ஓவரை வீசிய பிராவோ, அந்த ஓவரில் 9 ரன் விட்டுக்கொடுத்து லிட்டன் தாஸின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதையடுத்து கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட, நெருக்கடி மிக்க அந்த ஓவரை வீசிய ஆண்ட்ரே ரசல் அருமையாக வீசினார். முதல் 5 பந்தில் 9 ரன்கள் கொடுத்த ரசல், கடைசி பந்தை மஹ்மதுல்லாவுக்கு செம யார்க்கராக வீச, அந்த யார்க்கரை மஹ்மதுல்லாவால் எதுவுமே செய்யமுடியாமல் போனது. அது டாட் பந்து. இதையடுத்து 3 ரன் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

click me!