பழசை மனசுல வச்சு டீம் எடுக்கக்கூடாது!உலகின் சிறந்த வீரரையே உட்கார வச்சுருக்கீங்க! செமயா விளாசிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Oct 29, 2021, 6:45 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் திலீப் தோஷி.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அணி பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை ஆட்டத்தின் எந்த சூழலிலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் தடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் பாகிஸ்தான் அபாரமாக ஆடியதை கடந்து, தவறான இந்திய அணி தேர்வு தான் காரணம் என்ற விமர்சனம் உள்ளது. 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ததே சிறப்பான தேர்வாக இல்லை என்ற விமர்சனம் வலுத்துவருகிறது.

ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டர். அவர் பந்துவீசினால் தான் அது இந்திய அணி காம்பினேஷனுக்கு வலு சேர்க்கும். ஹர்திக் பாண்டியா பந்துவீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லாததால், அவர் அண்மைக்காலமாக பந்துவீசுவதேயில்லை. அதனால் இந்திய அணி சரியாக 5 பவுலர்களுடன் ஆட வேண்டிய கட்டாயத்தில் ஆடுவதால், 6வது பவுலிங் ஆப்சன் கிடையாது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. பந்துவீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் இல்லாத அவரை அணியில் எடுத்தது குறித்த விமர்சனம் உள்ளது.

அதேபோல புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர், தீபக் சாஹரை மெயின் அணியில் எடுக்காமல் ரிசர்வ் வீரராக எடுத்தது, அஷ்வினை ஆடும் லெவனில் சேர்க்காதது என அணி தேர்வின் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார் முன்னாள் வீரர் திலீப் தோஷி.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள திலீப் தோஷி, இந்திய அணியில் சில வீரர்கள் இன்னும் பழைய பங்களிப்பின் அடிப்படையில் எடுக்கப்படுகிறார்கள். ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் அவர்களது முழு திறமைக்கு இப்போது ஆடுவதில்லை. உலகின் சிறந்த ஸ்பின்னரான அஷ்வினை அனைத்து போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை. அவரை பென்ச்சில் உட்கார வைத்திருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த திறமைசாலி. பாண்டியா அவரது திறமையை வளர்த்துக்கொள்வதிலும், நிலையான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். 130 கிமீ வேகத்தில் வீசும் புவனேஷ்வர் குமாரால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை. நல்ல டச்சில் இருக்கும் ஷர்துல் தாகூரை ஆடவைக்க வேண்டும். தீபக் சாஹர் மெயின் அணியில் இடம்பெற தகுதியுள்ளவர். ஜடேஜாவின் பவுலிங் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்துள்ளது. அவரும் நன்றாக பவுலிங் வீசியாக வேண்டும் என்று திலீப் தோஷி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில், கடந்த போட்டியில் செய்த தவறுகளை கடந்து அணி தேர்வு சிறப்பாக செய்யப்படும். வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்து, அடுத்த போட்டியில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என நம்புவோம்.
 

click me!