ஹெட்மயர், பிராவோ, ரசல் காட்டடி..! வெஸ்ட் இண்டீஸிடம் மறுபடியும் மண்டியிட்டு சரணடைந்த ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Jul 11, 2021, 2:29 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் 30 ரன்கள் அடித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஃப்ளெட்சரும்(9), கெய்லும்(13) ஏமாற்றமளித்தனர். ஆனால் பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய ஹெட்மயர் அரைசதம் அடித்தார்.

அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹெட்மயர், 36 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களை விளாசினார். அதன்பின்னர் பிராவோவும் ஆண்ட்ரே ரசலும் அடித்து ஆடி பெரிய ஸ்கோரை எட்டவைத்தனர். அதிரடியாக ஆடிய பிராவோ 34 பந்தில் 47 ரன்களையும், ஆண்ட்ரே ரசல் 8 பந்தில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களையும் விளாச, 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்களை குவித்தது.

197 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தவிர வேறு எந்த ஆஸ்திரேலிய வீரரும் சரியாக ஆடவில்லை. கேப்டன் ஆரோன் ஃபின்ச் 6 ரன்னிலும், தொடக்க வீரர் மேத்யூ வேட் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். ஜோஷ் ஃபிலிப்(13), மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ்(19), பென் மெக்டெர்மோட்(7), டேனியல் கிறிஸ்டியன்(9) என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், பின்வரிசை வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 19.2 ஓவரில் வெறும் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷிம்ரான் ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!