தவான் கேப்டன்சி வேடிக்கையா இருக்கும்.. காமெடி சம்பவத்தை பகிர்ந்த யுவராஜ் சிங்

By karthikeyan VFirst Published Jul 10, 2021, 10:03 PM IST
Highlights

ஷிகர் தவான் கேப்டன்சியில் வேடிக்கையான சில முடிவுகளை பார்க்க முடியும் என்று அவரது கேப்டன்சியில் ஆடியுள்ள யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய மெயின்  அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதால், இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆடுகிறது.

ஷிகர் தவான் தான் அந்த இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். இலங்கை அணியில் சிலருக்கு கொரோனா உறுதியானதால் வரும் 13ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்த தொடர், 18ம் தேதி தொடங்குகிறது. 

ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தவுள்ள நிலையில், அவரது கேப்டன்சியில் வேடிக்கையான விஷயங்கள் நடக்கும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2012 உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் ஆடிய வடக்கு மண்டல அணியில் யுவராஜ் சிங்கும் ஆடினார். அந்த தொடரில் மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் நடந்த நகைச்சுவையான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் யுவராஜ் சிங்.

இதுகுறித்து பேசிய யுவராஜ் சிங், ஷிகர் தவான் கேப்டன்சி வேடிக்கையாக இருக்கும். அவரது கேப்டன்சியில் நான் ஆடியிருக்கிறேன். உண்மையாகவே வேடிக்கையான சில விஷயங்களை செய்வார். ஷிகர் தவானின் கேப்டன்சி நகர்வுகளில் எனக்கு மிகவும் பிடித்த, ஞாபகம் இருக்கிற ஒரு நகர்வை கூறுகிறேன். மத்திய மண்டல அணிக்கு எதிரான போட்டியில், மத்திய மண்டல அணியில் ஆடிய புவனேஷ்வர் குமார் 49 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், திடீரென தவான் அனைத்து ஃபீல்டர்களையும் 30 யார்டு சர்க்கிளுக்குள் வருமாறு அழைத்தார். நான் ஏன் என்று காரணம் கேட்டேன். அதற்கு, புவனேஷ்வர் குமார் 99 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்; சதத்திற்காக சிங்கிள் அடிக்க முயல்வார், அதைத்தடுக்கத்தான் என்றார். அவர் 49 ரன்கள் தான் அடித்திருக்கிறார் என்று நான் சொன்னபிறகு, ஃபீல்டர்களை பின்னால் செல்லுமாறு கூறினார் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!