எழுந்து நின்று கைதட்டிய சென்னை ரசிகர்கள்..சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள்! வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 8:15 PM IST
Highlights

சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி பாகிஸ்தான் அணியை பாராட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்து நெகிழ்ந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.
 

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களுமே வெற்றி பெற வேண்டும் என்பதற்கான வெறித்தனமாக ஆடுவார்கள். இரு அணி வீரர்களும் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள். 

ரசிகர்கள் மத்தியிலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றால் எதிர்பார்ப்பு அதிகம். இந்திய அணி 2000ம் ஆண்டுக்கு பிறகுதான் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி அந்த அணியை வீழ்த்தி அதிகமான வெற்றிகளை பெறுகிறது. ஆனால் 1990களில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பெரும்பாலும் பாகிஸ்தான் அணி தான் வெற்றி பெறும். 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே ஆடிவருவதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறைய போட்டிகள் நடைபெறுவதில்லை. 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வேற லெவல் தான். அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலருமான வாசிம் அக்ரம், அவருக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் சுற்றுப்பயணம் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி 1999ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்ததுதான் என்று கூறியுள்ளார்.

பொதுவாக இந்திய அணிக்கு பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவிலும் ரசிகர்களின் ஆதரவு கொஞ்சம் கூட இருக்காது. ஆனால் 1999 தொடரில் சென்னை ரசிகர்கள் தங்களது ஆட்டத்தை பாராட்டிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார் வாசிம் அக்ரம். 

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், 1990களில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறது. இப்போதைய நிலவரம் வித்தியாசமானது. 1990களை போல அல்ல. எந்த சுற்றுப்பயணம் மிகவும் பிடித்தது என்று கேட்டீர்கள் என்றால், கண்டிப்பாக 1999ல் எனது தலைமையில் இந்தியாவிற்கு சென்ற சுற்றுப்பயணம் தான்.

அப்போது நான் தான் கேப்டன். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. ஒட்டுமொத்த ஸ்டேடியமும் அமைதியாக இருந்தால், நாம் சரியாக ஆடிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் என்று எனது அணி வீரர்களிடம் சொன்னேன். ஏனெனில் இந்தியாவில் பாகிஸ்தானுக்கு கண்டிப்பாக ஆதரவு இருக்காது. பாகிஸ்தானில் இந்தியாவிற்கும் அதே நிலைமை தான். அதனால் தான், ஸ்டேடியம் அமைதியாக இருந்தால், நாம் நன்றாக ஆடுகிறோம் என்று அர்த்தம் என்று வீரர்களிடம் சொன்னேன்.

சக்லைன் முஷ்டாக் அருமையாக வீசினார். அவர்தான் தூஸ்ராவை கண்டறிந்தார். நாங்கள் நன்றாக ஆடினோம்; அந்த போட்டியில் வெற்றியும் பெற்றோம். சென்னை ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி எங்களை நெகிழவைத்தார்கள். அதுதான் எனது சிறந்த சுற்றுப்பயணம் என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார். 

அந்த 1999 சுற்றுப்பயணத்தில், பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சக்லைன் முஷ்டாக் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். அந்த போட்டியைத்தான் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர் 1-1 என சமனடைந்தது குறிப்பிடத்தக்கது.  
 

click me!