தவறான ஆளிடம் வாயை கொடுத்து அசிங்கப்பட்ட ரிக்கி பாண்டிங்..! தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 6:48 PM IST
Highlights

2008ல் பெங்களூரு டெஸ்ட்டில் ரிக்கி பாண்டிங்கை செய்ததுதான் தனது சிறந்த ஸ்லெட்ஜிங் என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். அவர்களுக்கு ஸ்லெட்ஜிங் ஆட்ட உத்திகளில் ஒன்று. அதிலும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வீரர்கள் அனைவருமே எதிரணி வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்வார்கள். அவர்களது அல்டிமேட் நோக்கம் என்பது எப்படியாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரை ஸ்லெட்ஜிங் செய்தால், ஒன்றுமே காரியம் சாதிக்கமுடியாது. ஏனெனில் என்னதான் ஸ்லெட்ஜிங் செய்தாலும் அவர்களது கவனம் ஆட்டத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் யுவராஜ் சிங்கோ, கம்பீரோ, ஹர்பஜன் சிங்கோ அப்படியில்லை. அவர்களிடம் சீண்டினால் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துவிடுவார்கள்.

அதிலும் கம்பீர் சொல்லவே வேண்டாம்.. எப்படா எவனாவது வம்புக்கு இழுப்பான் என்று காத்திருப்பதை போலவே, யாராவது சீண்டினால் உடனடியாக கொதித்தெழுந்து, அவர்கள் கொடுத்ததைவிட இருமடங்காக திருப்பி கொடுத்துவிடுவார். பாகிஸ்தான் வீரர்கள் ஷாஹித் அஃப்ரிடி, காம்ரான் அக்மல் ஆகியோருடனான கம்பீரின் மோதல், கிரிக்கெட்டின் ஆல்டைம் மோதல்களின் பட்டியலில் இடம்பிடித்தவை. 

2008ல் இந்தியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஷேன் வாட்சன், ரிக்கி பாண்டிங், மிட்செல் ஜான்சன் ஆகியோரின் ஸ்லெட்ஜிங்கிற்கு அவர்களது பாணியிலேயே பதிலடி கொடுத்து தெறிக்கவிட்டார் கம்பீர். 

அந்தவகையில், இர்ஃபான் பதானுடனான உரையாடலில், யாரை ஸ்லெட்ஜிங் செய்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது என்ற கேள்விக்கு கம்பீர் பதிலளித்துள்ளார்.

அதுகுறித்து பேசிய கம்பீர், ரிக்கி பாண்டிங்கை ஸ்லெட்ஜிங் செய்ததுதான். 2008ல் அனில் கும்ப்ளேவின் தலைமையில் அந்த டெஸ்ட் தொடரில் ஆடினோம். அந்த தொடரில் நான் ஒரு இரட்டை சதம் கூட அடித்தேன்(டெல்லி டெஸ்ட்டில்). அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்தது. அந்த போட்டியில் நான் பேட்டிங் ஆடியபோது ஏதோ சொல்லி என்னை சீண்டினார் பாண்டிங்.

சில்லி பாயிண்ட்டில்(ஃபீல்டிங் திசை) அவர் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது என்னிடம், உன்னால் உலகின் எல்லா பகுதிகளிலும் சிறப்பாக ஆடிவிடமுடியாது.. நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல என்கிற ரீதியில் பேசி என்னை சீண்டினார். அதற்கு நான், நீயும் இந்தியாவில் ஒன்றையும் சாதித்துவிடவில்லை என்று பதிலடி கொடுத்தேன். உண்மையாகவே அவர் இந்தியாவில் சரியாக ஆடியதில்லை. இந்தியாவில் அவரது ரெக்கார்டுகளை பார்த்தீர்கள் என்றால் தெரியும் என்று கம்பீர் தெரிவித்தார். 

ரிக்கி பாண்டிங் இந்தியாவில் மொத்தமாக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வெறும் 26.48 என்ற சராசரியுடன் 662 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்திய ஸ்பின்னர்களை இந்திய ஆடுகளங்களில் திறம்பட எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரிக்கி பாண்டிங், இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரேயொரு சதம் மட்டுமே அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!