இந்திய அணியிடம் ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் கொஞ்சம் கூட இல்ல.. ரொம்ப திமிரா பேசிய பாகிஸ்தான் சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 6:06 PM IST
Highlights

2019 உலக கோப்பையில் இந்திய அணி, இங்கிலாந்துக்காக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆடவில்லை என்று பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர், தன் பங்கிற்கு தானும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
 

2019 உலக கோப்பையை பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போலவே இங்கிலாந்து அணியே வென்றது. அந்த உலக கோப்பை தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. 

பாகிஸ்தான் அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பு இந்தியாவின் கையில் இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டிக்கு முன்பாகவே இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இல்லை. 

அந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அதனால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது. இதையடுத்து, பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலர்  ஏற்கனவே பலமுறை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், அண்மையில் அதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தது, பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு தீனி போடுவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த போட்டியில் தோனியும் இந்திய அணியும் ஆடிய விதமும் வியப்பளித்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். தோனியின் பேட்டிங் நோக்கமற்றதாக இருந்ததாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அப்துல் ரசாக் மற்றும் முஷ்டாக் அஹமது ஆகியோர், பாகிஸ்தான் அரையிறுதிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக மறுபடியும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். 

”பாகிஸ்தான் அரையிறுதிக்கு வருவதை விரும்பாத இந்திய அணி, வேண்டுமென்றே தான் இங்கிலாந்திடம் தோற்றது என்பதை நான் தொடர்ந்து கூறிவருகிறேன். பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் எளிதாக அடிக்கவல்ல தோனி தடுப்பாட்டம் ஆடினார். தோற்பதற்காகத்தான் அப்படி ஆடினார். உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தோல்வியடைந்த இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்க வேண்டும்” என்று அப்துல் ரசாக் தெரிவித்திருந்தார்.

”பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அஹமதுவும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நேரடியாக அதை சொல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தன்னிடம் அப்படி சொன்னதாக கூறினார். இங்கிலாந்திடம் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றதாக கெய்ல், ரசல், ஹோல்டர் ஆகிய மூவரும் தன்னிடம் கூறியதாக” முஷ்டாக் அஹமது தெரிவித்தார். 

இந்நிலையில், அந்த குறிப்பிட்ட இந்தியா - இங்கிலாந்து உலக கோப்பை போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ், எந்த கிரிக்கெட் ரசிகரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள்.. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற ஸ்பிரிட்டுடன் ஆடவில்லை என்றுதான் சொல்வார்கள். போட்டியில் வெற்றி பெறுவதோ, ஒரு அணி தொடரை விட்டு வெளியேறுவதோ எல்லாம்  அடுத்த விஷயம். நாங்கள் நன்றாகத்தான் ஆடினோம். ஆனால் ஒருசில தவறுகளால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினோம்.

ஆனால் ஒரு கிரிக்கெட் ரசிகராக, இந்தியா - இங்கிலாந்து இடையேயான அந்த போட்டியை பார்த்தால், வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இந்திய அணியிடம் நான் பார்க்கவில்லை. அந்த போட்டியை மிக மோசமானதாக உணர்கிறேன். இந்தியா இங்கிலாந்திடம் தோற்றதால் தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது என்று நான் சொல்லமாட்டேன். ஏனெனில் நாங்களும் சில தவறுகளை செய்ததால் எங்களால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. ஆனால் அதேவேளையில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் ஆடவில்லை என்று முகமது ஹஃபீஸ் தெரிவித்தார். 
 

click me!