தாதா இல்லைனா நான் இல்ல..! நன்றி மறவாத நட்சத்திர வீரர்

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 4:24 PM IST
Highlights

தனது கிரிக்கெட் கெரியரில் தனக்கு மிகுந்த ஆதரவாக இருந்து தன்னை வளர்த்துவிட்ட கேப்டன் கங்குலியை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் வீரர்.
 

இந்திய கிரிக்கெட் அணியை மறுகட்டமைப்பு செய்தவர் முன்னாள் கேப்டன் கங்குலி. இந்திய அணி சூதாட்டப்புகாரால் சின்னபின்னமாகியிருந்த நிலையில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, இந்திய அணியின் அணுகுமுறையை மாற்றி ஆக்ரோஷமான அணியாக உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட்டில் வீரநடை போட வைத்தவர் கங்குலி. 

சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆஷீஸ் நெஹ்ரா, முகமது கைஃப் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளித்து அவர்களை வளர்த்தெடுத்த கங்குலி தான், தோனியின் வளர்ச்சிக்கும் காரணம். பின்னாளில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்து, இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 சர்வதேச கோப்பைகளையும் வென்றுகொடுத்த தோனியும், கங்குலியின் கேப்டன்சியில் அவரது ஆதரவில் வளர்ந்தவர் தான். 

கங்குலியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் உலகில் இந்தியாவுக்கென்று தனி அந்தஸ்துடன் கெத்தாக நடைபோட்டது. திறமையான வீரர்கள் ஏராளமானோரை அடையாளம் கண்டு வளர்த்துவிட்டவர் கங்குலி. அந்தவகையில், கங்குலியின் ஆதரவால் வளர்ந்து சிறந்து வீரராக ஒரு ரவுண்டு வந்த ஹர்பஜன் சிங், கங்குலி தனக்கு அளித்த ஆதரவு குறித்து நினைவுகூர்ந்துள்ளார். 

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுக்கு யூடியூபில் அளித்த இண்டர்வியூவில் பேசிய ஹர்பஜன் சிங், நமக்காக யார் இருக்கிறார்கள்? யாரை நம்பலாம் என்று ஒரு கட்டத்தில் யோசித்திருக்கிறேன். ஏனெனில் என் முகத்திற்கு முன்னாள் எனக்கு ஆதரவாக பேசிய பலர், உண்மையாகவே எனக்கு ஆதரவாக இருந்ததில்லை. அப்படியான ஒரு இக்கட்டான சூழலில், யாருடைய ஆதரவும் இல்லாமல் நான் இருந்த நேரத்தில் தான், எனக்கு கங்குலி ஆதரவாக இருந்தார். 

தேர்வாளர்கள் எனக்கு எதிராக இருந்தார்கள். அவர்கள் என்னிடம் சொன்னதையெல்லாம் நான் பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால் அப்படியான நேரத்தில், எனக்கு ஆதரவாக இருந்து அணியில் எனக்கு ஆதரவளித்தார் கங்குலி. கங்குலியை தவிர வேறு யார் கேப்டனாக இருந்தாலும் எனக்கு அந்தளவிற்கு ஆதரவளித்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. கங்குலியை நான் எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஹர்பஜன் சிங், அதன்பின்னர் அணியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். கங்குலி கேப்டனான பின்புதான், ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பளித்தார். வாய்ப்பு அளித்ததுடன் மட்டுமல்லாது, ஹர்பஜன் சிங்கிற்கு தொடர்ச்சியாக அணியில் ஆட வாய்ப்பளித்து, அவரை இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னராக உருவாக்கினார். ஹர்பஜன் சிங் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 413 விக்கெட்டுகளையும் 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269  விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 
 

click me!