ஷேன் வாட்சனை தாக்கியது ஏன்..? 12 ஆண்டுகளுக்கு பிறகு உண்மையை சொன்ன இந்திய அணியின் சண்டக்கோழி.. வீடியோ

By karthikeyan VFirst Published Jun 17, 2020, 5:13 PM IST
Highlights

2008ம் ஆண்டு டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஷேன் வாட்சனுடனான மோதல் குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். 
 

ஆஸ்திரேலிய வீரர்கள் பொதுவாகவே ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். அவர்களுக்கு ஸ்லெட்ஜிங் ஆட்ட உத்திகளில் ஒன்று. அதிலும் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வீரர்கள் அனைவருமே எதிரணி வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்வார்கள். அவர்களது அல்டிமேட் நோக்கம் என்பது எப்படியாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக எந்த எல்லைக்கும் போவார்கள்.

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லட்சுமணன் ஆகியோரை ஸ்லெட்ஜிங் செய்தால், ஒன்றுமே காரியம் சாதிக்கமுடியாது. ஏனெனில் என்னதான் ஸ்லெட்ஜிங் செய்தாலும் அவர்களது கவனம் ஆட்டத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் யுவராஜ் சிங்கோ, கம்பீரோ, ஹர்பஜன் சிங்கோ அப்படியில்லை. அவர்களிடம் சீண்டினால் உடனடியாக தக்க பதிலடி கொடுத்துவிடுவார்கள்.

அதிலும் கம்பீர் சொல்லவே வேண்டாம்.. எப்படா எவனாவது வம்புக்கு இழுப்பான் என்று காத்திருப்பதை போலவே, யாராவது சீண்டினால் உடனடியாக கொதித்தெழுந்து, அவர்கள் கொடுத்ததைவிட இருமடங்காக திருப்பி கொடுத்துவிடுவார். பாகிஸ்தான் வீரர்கள் ஷாஹித் அஃப்ரிடி, காம்ரான் அக்மல் ஆகியோருடனான கம்பீரின் மோதல், கிரிக்கெட்டின் ஆல்டைம் மோதல்களின் பட்டியலில் இடம்பிடித்தவை. 

அதேபோலத்தான், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனுடனான மோதல். 2008 பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஷேன் வாட்சன், கம்பீரிடம் சீண்டிக்கொண்டே இருந்தார். கம்பீர் அடித்த பந்தை பிடித்து எறிவதுபோல் அச்சுறுத்துவது, கம்பீரை நோக்கி சீண்டும் வகையில் சில வார்த்தைகளை பேசிவிட்டு செல்வது என்று இருந்தார். இதையடுத்து ஷேன் வாட்சன் வம்பிழுத்ததற்கு பதிலடியாக, ரன் ஓடும்போது குறுக்கே நின்ற ஷேன் வாட்சனை, முழங்கையை வைத்து பலமாக ஒரு இடி இடித்துவிட்டு  சென்றார் கம்பீர். 

அதற்காக கம்பீருக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டது. ஷேன் வாட்சனுக்கு விதியை மீறி நடந்ததாக ஊதியத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டது. அந்த போட்டியில் இந்த சம்பவத்திற்கு பின்னரும், மிட்செல் ஜான்சன், கம்பீரை வம்புக்கு இழுத்தார். அவருடனும் வாக்குவாதம் செய்தார் கம்பீர். ஆஸ்திரேலியர்கள் என்னதான் ஸ்லெட்ஜிங் செய்தாலும், அவற்றிற்கெல்லாம் தனது வாயாலும் பதிலடியான செயல்களாலும் மட்டுமே பதிலடி கொடுக்காமல் பேட்டிங்கிலும் பதிலடி கொடுத்தார் கம்பீர். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 206 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களும் அடித்தார் கம்பீர்.

அந்த சம்பவம் குறித்து இர்ஃபான் பதானுடனான உரையாடலில் பேசியுள்ள கம்பீர், நான் ஷேன் வாட்சனை வேண்டுமென்றே முழங்கையால் இடிக்கவில்லை. நிறைய நான் அவரை வேண்டுமென்றே இடித்தேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் உள்நோக்கத்துடன் நான் அப்படி செய்யவில்லை என்று கம்பீர்  தெரிவித்தார். (அந்த வீடியோ இதோ)

நான் அதை ஒப்புக்கொண்டால் எனக்கு தடை விதிக்கப்படாது என்று பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, போட்டி நடுவர் கிறிஸ் பிராட், உங்கள் தவறை ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு ஆம் என்றேன். ஆனால் அவர் எனக்கு தடை விதித்தார் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

 

click me!