அக்தர் நீ சொல்றது தப்பு.. தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டது தான் சரி! நியாயமா பேசிய வாசிம் அக்ரம்

By karthikeyan VFirst Published Nov 16, 2021, 5:51 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது தவறான முடிவு என்று ஷோயப் அக்தர் விமர்சித்திருந்த நிலையில், அது சரியான முடிவுதான் என்று காரணத்துடன் விளக்கியுள்ளார் வாசிம் அக்ரம்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடரின் ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய 4 அணிகளுமே பார்க்கப்பட்டன.

ஆஸ்திரேலிய அணி டி20 கிரிக்கெட்டில் பெரிதாக ஜொலிக்காததால் அந்த அணியை டாப் 2-3 ஆப்சன்களாக எந்த முன்னாள் வீரர்களும் மதிப்பிடவேயில்லை. ஆனால் பேட்டிங்கில் வார்னர், மார்ஷ் மற்றும் பவுலிங்கில் ஆடம் ஸாம்பா, ஹேசில்வுட் ஆகியோரின் அபாரமான பங்களிப்பால் முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.

டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து ஒதுக்கியது மட்டுமல்லாது அவர் ஃபார்மில் இல்லை என்பதற்காக அவரை ஆடும் லெவனிலிருந்தே ஓரங்கட்டப்பட்டார். டேவிட் வார்னரின் மோசமான ஃபார்ம் ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலக கோப்பையில் கவலையளிக்கும் விதமாக இருந்தது.

ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். முக்கியமான நாக் அவுட் போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி முறையே 49 மற்றும் 53 ரன்களை விளாசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்த தொடரில் 7 போட்டிகளில் ஆடி 3 அரைசதங்கள் மற்றும் 48.16 என்ற சராசரியுடன் 289 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய அணி டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததற்காக, அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

ஆனால் தொடர் நாயகன் விருது, இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த பாபர் அசாமுக்குத்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது தவறான முடிவு என்றும் விமர்சித்திருந்தார் ஷோயப் அக்தர்.

இந்நிலையில், டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது சரிதான் என்று வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார். இதுகுறித்து நியாயமாக பேசிய வாசிம் அக்ரம், அதிக ரன்களை குவித்த வீரருக்குத்தான் தொடர் நாயகன் விருது கொடுக்க வேண்டும் என்பது அல்ல. அவர்கள் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வார்னர் தனி நபராக ஆஸ்திரேலியாவிற்கு முக்கியமான போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார். உலக கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல காரணமாகவும் திகழ்ந்தார். எனவே வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது சரிதான் என்று நியாயமாக பேசினார் வாசிம் அக்ரம்.
 

click me!