இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து Kane Williamson விலகல்..! விவ(கா)ரமான ஆளுங்க இந்த வில்லியம்சன்

By karthikeyan VFirst Published Nov 16, 2021, 4:06 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) விலகியுள்ளார்.
 

டி20 உலக கோப்பை ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, முதல் முறையாக டி20 உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த நியூசிலாந்து அணி, அந்த தொடரை முடித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கு வந்துவிட்டது.

இந்தியா - நியூசிலாந்து இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. நாளை(17), 19 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கின்றன.

நவம்பர் 25-29ல் கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டியும், டிசம்பர் 3-7ல் மும்பை வான்கடேவில் 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளன. இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது. எனவே இந்த தொடரில் வெற்றி பெறுவது அவசியம்.

அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்துவதற்காக டி20 தொடரிலிருந்து விலகி, டெஸ்ட் தொடருக்காக ஜெய்ப்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன். ஐபிஎல், டி20 உலக கோப்பை என தொடர்ந்து கிரிக்கெட் ஆடிவரும் கேன் வில்லியம்சனுக்கு இந்த டி20 தொடரில் பெறும் ஓய்வு, டெஸ்ட் தொடரில் அவர் ஃப்ரெஷ்ஷாக வந்து கவனம் செலுத்த உதவும்.

வில்லியம்சனுக்கு டி20 தொடர் பெரிய விஷயமில்லை. அவரது கவனம் முழுவதும் டெஸ்ட் தொடரை வெல்வதில் தான் உள்ளது. அதுவும், இந்தியாவில் வைத்து இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்துவது கடினமான காரியம் என்பதால் அதை செய்ய தயாராகிவருகிறார் கேன் வில்லியம்சன்.

தெளிவான களவியூகங்கள் மற்றும் அவற்றை களத்தில் திட்டமிட்டபடியே செயல்படுத்துதல், அனைத்து வீரர்களுக்குமான தெளிவான ரோல், கேன் வில்லியம்சனின் சிறப்பான கேப்டன்சி என ஒரு முழு அணியாக திறம்பட செயல்படுவதுதான் நியூசிலாந்து அணியின் பெரிய பலம். அந்தவகையில், டி20 தொடரில் ஆடாததால், இந்த இடைவெளியில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக செயல்படுத்த வேண்டிய திட்டங்களையும் வில்லியம்சன் வகுத்துவிடுவார்.

வில்லியம்சன் டி20 தொடரிலிருந்து விலகியதால், சீனியர் வீரரான டிம் சௌதி நியூசிலாந்து அணியை வழிநடத்தவுள்ளார்.
 

click me!