ஆகாஷ் சோப்ராவின் பெஸ்ட் T20 World Cup லெவன்! நமீபியா வீரர் கூட இருக்கார்.. இந்தியாவின் நிலைமை இப்படி ஆயிடுச்சே

By karthikeyan VFirst Published Nov 16, 2021, 3:05 PM IST
Highlights

டி20 உலக கோப்பையின் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா. இந்த லெவனில் நமீபியா வீரர் டேவிட் வீஸ் கூட இடம்பெற்றிருக்கிறார். ஆனால் ஒரு இந்திய வீரர் கூட இல்லை.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளாவது அரையிறுதிக்கு சென்றன. ஆனால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றமளித்தன.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்விகளின் காரணமாக, அடுத்த 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் தனது சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். அதில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.

டி20 உலக கோப்பை 2021-ன் தொடக்க வீரர்களாக, டேவிட் வார்னர் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.  289 ரன்களை குவித்து, ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்து, தொடர் நாயகன் விருதையும் வென்றார் டேவிட் வார்னர். இந்த தொடருக்கு முன் ஃபார்மில் இல்லாமல் இருந்த வார்னர், உலக கோப்பையில் சிறப்பாக ஆடினார். இந்த உலக கோப்பையில் ஒரேயொரு வீரர் தான் சதமடித்தார். அது ஜோஸ் பட்லர். அந்தவகையில், வார்னர் மற்றும் பட்லர் ஆகிய இருவரையும் ஆகாஷ் சோப்ரா இந்த தொடரின் சிறந்த தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

3ம் வரிசையில் பாபர் அசாமை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார். இலங்கை அணியில் சிறப்பாக ஆடிய சாரித் அசலங்கா மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டருக்கு வலுசேர்த்த மார்க்ரம் ஆகிய இருவரையும் முறையே 4 மற்றும் 5ம் வரிசைகளில் தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஸ்பின் ஆல்ரவுண்டராக மொயின் அலி மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக நமீபியா வீரர் டேவிட் வீஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் வீஸ் நமீபியா அணிக்காக ஆடிவரும் நிலையில், இந்த உலக கோப்பையில் நமீபியா அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு நமீபியா அணியில் தனித்து நின்றார். ஸ்பின்னராக ஆஸ்திரேலியாவின் ரிஸ்ட் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பாவை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட் மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.  ஆகாஷ் சோப்ராவின் இந்த அணியில் அசோஸியேட் அணியான நமீபியா அணியை சேர்ந்த ஒரு வீரர் கூட இருக்கிறார். ஆனால் உலக கோப்பையை  வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி வீரர் ஒருவர் கூட இல்லை. 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த டி20 உலக கோப்பையின் சிறந்த அணி:

டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சாரித் அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, டேவிட் வீஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட், அன்ரிக் நோர்க்யா. 
 

click me!