ஹர்ஷா போக்ளேவின் டி20 உலக கோப்பை 2021-ன் சிறந்த லெவன்..! தொடர் நாயகனுக்கே இடம் இல்ல

By karthikeyan VFirst Published Nov 15, 2021, 9:47 PM IST
Highlights

ஹர்ஷா போக்ளே டி20 உலக கோப்பையின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய எந்த அணியும் கோப்பையை வெல்லவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளாவது அரையிறுதிக்கு சென்றன. ஆனால் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறி ஏமாற்றமளித்தன.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் அடைந்த படுதோல்விகளின் காரணமாக, அடுத்த 3 போட்டிகளில் அபார வெற்றி பெற்ற போதிலும், இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.

இந்த டி20 உலக கோப்பை தொடரின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே. அதில் நமீபியா வீரர் கூட ஒருவர் இடம்பெற்றிருக்கிறார். ஆனால் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அதற்கு காரணம் சொல்லும்படியாக இந்திய வீரர்கள் யாரும் சரியாக ஆடவில்லை.

டி20 உலக கோப்பை 2021-ன் தொடக்க வீரர்களாக, இந்த தொடரில் அதிக ரன்களை (303 ரன்கள்) குவித்த பாபர் அசாம் மற்றும் இந்த தொடரில் சதமடித்த ஒரே வீரரான ஜோஸ் பட்லர் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. 

இந்த உலக கோப்பையில் 289 ரன்களை குவித்து, ஆஸ்திரேலியா கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்து, தொடர் நாயகன் விருதையும் வென்ற டேவிட் வார்னரை ஹர்ஷா போக்ளே தனது அணியில் தேர்வு செய்யவில்லை.

3ம் வரிசையில் இலங்கையின் சாரித் அசலங்கா, 4ம் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம் மற்றும் 5ம் வரிசையில் பாகிஸ்தானின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக் ஆகியோரை தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே, ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக நமீபியா அணி வீரர் டேவிட் வீஸ்-ஐ தேர்வு செய்துள்ளார் ஹர்ஷா போக்ளே. ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஷ் ஹேசில்வுட், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த டி20 உலக கோப்பையின் சிறந்த அணி:

பாபர் அசாம், ஜோஸ் பட்லர், சாரித் அசலங்கா, மார்க்ரம், ஷோயப் மாலிக், மொயின் அலி, வனிந்து ஹசரங்கா, டேவிட் வீஸ், ஜோஷ் ஹேசில்வுட், ஷாஹீன் அஃப்ரிடி, அன்ரிக் நோர்க்யா.
 

click me!