இலங்கை அணியின் டி20 கிரிக்கெட் போட்டி கேப்டனான வணிந்து ஹசரங்கா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி குரூப் சுற்றுபோட்டிகளுடன் வெளியேறியது. குரூப் டி பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை விளையாடிய 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கு சுழற்பந்து வீச்சாளரான வணிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இவரது தலைமையிலான இலங்கை அணி தோல்வி அடைந்து வெளியேறியது. டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் கடந்த ஆண்டு மட்டும் 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார்.
வரும் ஜூலை மாதம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னதாக வணிந்து ஹசரங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹசரங்கா கொடுத்த ராஜினாமா கடிதத்தில், அணியின் நலன் கருதி தலைமைப் பொறுப்புகளில் இருந்து தன்னை நீக்கிவிட்டு அணியில் ஒரு வீரராக நீடிக்க முடிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு வீரராக எனது சிறந்த முயற்சிகளை இலங்கை எப்பொழுதும் கொண்டிருக்கும். நான் எப்போதும் அணிக்கும், அணியின் தலைமைக்கும் ஆதரவு கொடுப்பேன் என்று தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார். இதையடுத்து, இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் அணிகளில் ஹசரங்கா முக்கிய அங்கமாக இருப்பார் என்பதை உறுதிப்படுத்தியது.
இலங்கை செல்லும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடுகிறது. வரும் ஜூலை 27 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதே போன்று இலங்கை அணிக்காக கேப்டன் மற்றும் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.