Zimbabwe vs India, 3rd T20I: வாஷிங்டன் சுழலில் 159 ரன்னுக்கு சுருண்ட ஜிம்பாப்வே – இந்தியா 2-1 என்று முன்னிலை!

By Rsiva kumar  |  First Published Jul 10, 2024, 8:35 PM IST

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணியானது 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1-1 என்று சமனில் உள்ளன. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி ஹராரேயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். முகேஷ் குமார் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கலீல் அகமது அணியில் இடம் பெற்றார். இதே போன்று ஜிம்பாப்வே அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ரிச்சர்டு கராவா அணியில் இடம் பெற்றார்.

Tap to resize

Latest Videos

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதில், கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்களில் வெளியேறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரனகள் எடுத்தார்.

பின்னர் கடின இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியில் வெஸ்லி மதெவரே மற்றும் தடிவானாஷே மருமணி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், மதெவரே 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மருமனி 13 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த பிரையன் பென்னட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் சிக்கந்தர் ராசா 15 ரன்களில் ஆட்டமிழக்க ஜோனாதன் காம்ப்பெல் 1 ரன்னில் நடையை கட்டினார். கிளைவ் மடாண்டே மற்றும் டியான் மையர்ஸ் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மடாண்டே 37 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை விளையடிய மையர்ஸ் 49 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டும், கலீல் அகமது ஒரு விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியைத் தொடர்ந்து வரும் 13 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது.

click me!