ரோஹித் - ராகுல் யாரை வேணா தூக்கிக்கங்க.. ஆனால் அந்த பையனை ஓபனிங்கில் இறக்கிவிடுங்க..! விவிஎஸ் லக்‌ஷ்மண் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 4:11 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஜோடியில் மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் விவிஎஸ் லக்‌ஷ்மண்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இந்த தொடரை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக விளையாடி படுதோல்வி அடைந்ததன் விளைவாக அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய சிறிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றியை இந்திய அணி பெற்றிருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக படுதோல்வி அடைந்தது.

இந்த தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்கு தவறான அணி தேர்வு தான் காரணம். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சீனியர் ஸ்பின்னர் அஷ்வினை ஆடவைக்காதது, ஃபார்மில் இல்லாத புவனேஷ்வர் குமாரை ஆடவைத்தது என தவறு செய்தது இந்திய அணி. 

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக ஆடிய இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கியதில் பிரச்னையில்லை. ஆனால் ரோஹித்துடன் இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ராகுலை சூர்யகுமாரின் பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் இறக்கியிருக்கலாம். அதைவிடுத்து இஷான் கிஷனை ராகுலுடன் தொடக்க வீரராக இறக்கிவிட்டு, ரோஹித்தை 3ம் வரிசையில் இறக்கியதால் அணியின் மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறியது. அதன்விளைவாக, மற்றுமொரு படுதோல்வியை அடைய நேர்ந்தது. 

அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றாலும், முதல் 2 போட்டிகளில் அடைந்த தோல்விகளின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் இந்த தொடரிலிருந்து வெளியேறியது.

ஏற்கனவே இந்த தொடரைவிட்டு வெளியேறிவிட்ட இந்திய அணி, இன்று நடக்கும் கடைசி சூப்பர் 12 சுற்றில் அனுபவமற்ற அசோஸியேட் அணியான நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. எப்படியும் நமீபியாவை இந்திய அணி வீழ்த்திவிடும். ஆனால் அந்த வெற்றியால் எந்த பயனும் இல்லை. இந்நிலையில், நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷனை தொடக்க வீரராக இறக்கலாம் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

இதுகுறித்து பேசியுள்ள லக்‌ஷ்மண், பவர்ப்ளே ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை மிக அருமையாக பயன்படுத்தி விளையாடக்கூடிய வீரர் இஷான் கிஷன். எனவே அவரை நமீபியாவுக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக இறக்கலாம். இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா தான். அவர் அபாயகரமான பேட்ஸ்மேனும் கூட. கேஎல் ராகுல் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதும் மேட்ச் வின்னர் என்பதும் நமக்கு தெரியும்.

எனவே ரோஹித் - ராகுல் தொடக்க ஜோடியை எப்படி பிரிப்பது என்ற தயக்கம் அணி நிர்வாகத்திற்கும், தேர்வுக்குழுவுக்கும் இருக்காத்தான் செய்யும். ஆனால் நமீபியாவுக்கு எதிரான போட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்பதால் இஷான் கிஷனை ஓபனிங்கில் இறக்கலாம் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். 
 

click me!