ஐபிஎல், உள்நாட்டு தொடர்களுக்கான வீரர்கள் தேர்வில் தலைவிரித்தாடும் லஞ்சம்..! போலீஸிடம் கொத்தா சிக்கிய கும்பல்

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 2:31 PM IST
Highlights

ஐபிஎல் மற்றும் உள்நாட்டு தொடர்களில் ஆடவைப்பதாக கூறி லஞ்சம் வாங்கி ஏமாற்றிய கும்பலை மொத்தமாக தூக்கியுள்ளது போலீஸ்.
 

உத்தர பிரதேச மாநிலம் குருகிராமை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அன்ஷுல் ராஜ் என்பவர் கடந்த ஜூலை மாதம் போலீஸில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், செக்யூர் கார்ப்பரேட் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா, பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு தொடரான சிகே நாயுடு கிரிக்கெட் தொடரில் இமாச்சல பிரதேச அணியில் விளையாட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.10 லட்சம் பெற்று தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.

இந்த புகாரை அடுத்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய குருகிராம் போலீஸ், புகார் கூறப்பட்ட அஷுடோஸ் போராவின் செக்யூர் கார்ப்பரேட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது முக்கியமான சில ஆவணங்கள் சில சிக்கின. 

உள்நாட்டு தொடர்களில் ஆடவைப்பதாக கூறி 18 வீரர்களிடம் பணம் பெற்றது தெரியவந்தது. அவர்களில் சிலருக்கு பணம் பெற்றுக்கொண்டு ஆட வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது தெரியவந்தது.

லஞ்சம் கொடுத்து அணியில் இடம்பெற்ற வீரர்களில் இந்திய அண்டர் 19 முன்னாள் வீரர் தனிஷ் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றிருந்தாக தெரிகிறது. 

இதையடுத்து செக்யூர் கார்ப்பரேட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் அஷுடோஸ் போரா மற்றும் அவரது சகோதரி சித்ரா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். 

அஷுடோஸ் போராவின் வங்கி கணக்கிலிருந்து டெல்லி கிரிக்கெட் வாரியா முன்னாள் கணக்கர் சஞ்சய் பரத்வாஜ், அருணாச்சல பிரதேச கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் நபாம் விவேக் ஆகியோருக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணங்களும் சோதனையில் சிக்கின.

இதையடுத்து சஞ்சய் பரத்வாஜிடம் விசாரணை நடத்தியபோது, போரா என்றால் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறிவிட்டார்.  நபாம் விவேக்கிடம் விசாரித்தபோது, போரா என்றால் யாரென்று தெரியாது. போரா என்பவரின்  உதவியாளர் என்று ஒருவர் என்னிடம் மைதானம் வாடகைக்கு வேண்டும் எனக்கூறி அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் கொரோனா காரணமாக போட்டிகள் நடைபெறாததால் அந்த அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டேன் எனக்கூறியிருக்கிறார்.

இதையடுத்து போரா, பரத்வாஜ், விவேக் ஆகிய மூவரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ஐபிஎல் தொடர் மற்றும் உள்நாட்டு தொடர்களில் வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே ஏஜெண்டுகளாக செயல்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும் சிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!