#ENGvsIND செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப செய்றாங்க..! சீனியர் வீரர்களை செம காட்டு காட்டிய விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Aug 14, 2021, 2:59 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பிவரும் இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வதாக விமர்சித்துள்ளார் முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் விவிஎஸ் லக்‌ஷ்மண்.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித்தும் ராகுலும் டாப் ஃபார்மில் அபாரமாக ஆடிவருகின்றனர். ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரும் பங்களிப்பு செய்கின்றனர். ஆனால் சீனியர் வீரர்களான புஜாராவும் ரஹானேவும் தொடர்ச்சியாக சொதப்பிவருகின்றனர். 

புஜாராவும் ரஹானேவும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்தே ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிவருகின்றனர். ரஹானேவாவது ஆஸ்திரேலியாவில் முக்கியமான போட்டியில் சதமடித்து அணியை காப்பாற்றினார். ஆனால் புஜாரா அதுகூட இல்லை. அந்த தொடர் முழுவதுமாகவே சொதப்பினார். அதன்பின்னர் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலுமே இவர்கள் சரியாக ஆடவில்லை.

தொடர் சொதப்பலின் விளைவாக, ஸ்கோர் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர்கள், அந்த அழுத்தத்திலேயே அடிக்க முயன்று விரைவில் ஆட்டமிழந்துவருகின்றனர். முதல் டெஸ்ட்டில் ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டர் சரிவால் இந்திய அணி 278 ரன்கள் மட்டுமே அடித்தது. புஜாரா 4 ரன்னிலும், ரஹானே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

லண்டனில் நடந்துவரும் 2வது டெஸ்ட்டிலும் முதல் இன்னிங்ஸில் இருவரும் ஏமாற்றமளித்தனர். புஜாரா 9 ரன்களிலும், ரஹானே ஒரேயொரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமான பேட்டிங் ஆர்டரான 3 மற்றும் 5ம் வரிசைகளில் இறங்கும் புஜாரா மற்றும் ரஹானேவின் தொடர் சொதப்பல் அணியை கடுமையாக பாதிக்கிறது. 4ம் வரிசையில் ஆடும் கேப்டன் கோலியும் கடந்த 2 ஆண்டுகளாக சரியாக ஆடுவதில்லை. அதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில், புஜாரா மற்றும் ரஹானே குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், ரஹானே ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் நிதானத்தை இழக்கிறார். நாட்டிங்காமிலும் அதையே தான் செய்தார். அவரது பேட்டிங் டெக்னிக்கிலும் பிரச்னைகள் இருக்கின்றன. அத்துடன், ஸ்கோர் செய்ய வேண்டும் என்ற கட்டாயம், அவர் மீதான நெருக்கடியை அதிகரிக்கிறது. அதனால் வேகமாக ஸ்கோர் செய்ய முயன்று ஆட்டமிழக்கிறார். எப்போது தெளிவில்லையோ, அப்போதே பிரச்னை தான். பந்தின் மீது கவனம் செலுத்தாமல், அதை அடித்தால் கிடைக்கும் ரிசல்ட்டின் மீது கவனம் செலுத்தினாலே, பந்தை தேடிச்சென்று ஆடும் தவறு நடக்கும்.

ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் கடந்த 8-10 மாதங்களாக செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து ஒரே மாதிரி ஆட்டமிழக்கின்றனர். ரஹானே ஆஸ்திரேலியாவில் எப்படி ஆட்டமிழந்தார் என்று பார்த்தோம். இந்த போட்டியிலும் கிட்டத்தட்ட அதேமாதிரி தான் ஆட்டமிழந்தார். அவரது இடது கால் காற்றிலேயே உள்ளது. வெளியிலிருந்து வரும் விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும் செவிமடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால், இந்திய வீரர்கள் மீது அதிகமான அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. தொடர்ச்சியாக குறைவான ரன் அடிக்கும்போது, அந்த அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார். 
 

click me!