#SLvsIND அவங்க 3 பேரும் 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடவேண்டும் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Jul 9, 2021, 8:02 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. வரும் 13ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது.

இந்த தொடர் இளம் வீரர்களுக்கும், இந்திய அணியில் இடத்தை இழந்த வீரர்களுக்கு மீண்டும் தங்களுக்கான இடத்தை பிடிக்கவும் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கும் மிக முக்கியமான தொடர்.

இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னர்களாகவும் அணியின் மாபெரும் சக்திகளாகவும் திகழ்ந்த குல்தீப் - சாஹல் ஜோடி, 2019 ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு பிறகு ஒன்றாக இணைந்து ஆடவேயில்லை. சாஹலாவது இந்திய அணியில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால் இந்திய அணியிலும் இடத்தை இழந்து, ஐபிஎல்லிலும் ஃபார்மில் இல்லாமல் அணியில் இடத்தை இழந்து திணறிவரும் குல்தீப்பிற்கு இந்த தொடர் அருமையான வாய்ப்பு.

இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடவேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

குல்தீப், சாஹல், ஹர்திக் குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், குல்தீப், சாஹல் ஆகிய இருவரையும் 3 ஒருநாள் போட்டிகளிலும் பார்க்க விரும்புகிறேன். ஒருநாள் போட்டிகளில் ஒவ்வொரு பவுலரும் 10 ஓவர்கள் வீசலாம். அதிக ஓவர்களை வீசும்போது தான் ஒரு பவுலர் வெற்றிகரமாக திகழவும் முடியும்; இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கவும் முடியும். அந்தவகையில் இந்த தொடர் குல்தீப்பிற்கு மிக முக்கியம். சாஹல் வெற்றிகரமான பவுலராகத்தான் திகழ்கிறார். அவரது அனுபவமும் அதிகம். எனவே மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் அணியின் முக்கியமான வீரரும் கூட. 

குல்தீப் யாதவ் தான் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதிகமான போட்டிகளில் ஆடுவது மட்டுமே அதற்கான வழி. எனவே 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆடி அதிகமான ஓவர்களை வீசுவதன் மூலம் குல்தீப் யாதவ் இழந்த நம்பிக்கையையும் உத்வேகத்தையும் பெறமுடியும். குல்தீப் - சாஹல் மட்டுமல்ல, ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதை பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன். ஹர்திக் பாண்டியா பந்துவீசினால், குல்தீப் - சாஹல் ஆகிய இருவருக்குமே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!