டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஆர்டர்.! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

By karthikeyan VFirst Published Jul 9, 2021, 6:28 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இந்த உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்றிராத கேப்டன் என்ற விமர்சனத்தை தகர்த்தெறிய, இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனினும், டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான இலங்கை தொடரில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சூர்யகுமார் யாதவுக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பது உறுதி. ஆனால் அவரது பேட்டிங் ஆர்டர் என்னவென்பது சிக்கல். ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகிய வீரர்கள் மிடில் ஆர்டரில் உள்ளனர். வழக்கமாக 3ம் வரிசையில் பேட்டிங் ஆடும் கேப்டன் கோலி, டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போவதாக தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் ரோஹித்துடன் இணைந்து கேஎல் ராகுல் ஓபனிங்கில் நன்றாகவே ஆடியுள்ளார். எனவே அந்த தொடக்க ஜோடியை பிரிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகம் இனிமேல் உறுதியான முடிவெடுக்கும். ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்கினால் கோலி 3ம் வரிசையில் ஆடுவார். ஒருவேளை ரோஹித்துடன் கோலி ஓபனிங்கில் இறங்கினால் சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் ஆடலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கினால், சூர்யகுமார் யாதவ் 3ம் வரிசையில் ஆடலாம். ராகுல் விஷயத்தில் இந்திய அணி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவுக்கு ஒரு இடம் கண்டிப்பாக இருக்கிறது. ஐபிஎல்லில் சூர்யகுமார் தொடர்ச்சியாக எப்படிப்பட்ட பேட்டிங்கை ஆடிவருகிறார் என்பதை நாமே பார்த்திருக்கிறோம். 3ம் வரிசையை தனக்கான பேட்டிங் வரிசையாக உருவாக்கி கொண்டுள்ளார். நல்ல பந்திலும் பவுண்டரி அடிக்க வல்லவர். அவருக்கு ஒரு இடம் கண்டிப்பாக இருக்கிறது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!