நீ சொன்ன மாதிரி உன் டீம் பிளேயர்ஸ் ஆடலயேப்பா..! வாழைப்பழத்தில் ஊசியை இறக்கியதை போல் மோர்கனை குத்திய சேவாக்

By karthikeyan VFirst Published Apr 14, 2021, 5:55 PM IST
Highlights

கேகேஆர் அணி வீரர்கள் மும்பைக்கு எதிராக ஆடிய விதத்தை பார்க்கையில், வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியிலும் வேட்கையிலும் ஆடியது மாதிரி தெரியவில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் கேகேஆர் அணி ஆடிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கியது கேகேஆர் அணி. ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக வெறும் 153 ரன்கள் என்ற இலக்கை அடிக்க முடியாமல் 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கில்லும் ராணாவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 72 ரன்களை சேர்த்து கொடுத்தனர். கில் 33 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் திரிபாதி மற்றும் கேப்டன் மோர்கன் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அரைசதம் அடித்த ராணா, 15வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தபோது, கேகேஆர் அணியின் ஸ்கோர் 122 ரன்கள்.

கடைசி 5 ஓவரில், 30 பந்தில் வெறும் 30 ரன் மட்டுமே கேகேஆர் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆண்ட்ரே ரசல், தினேஷ் கார்த்திக் ஆகிய 2 ஃபினிஷிங் ரோல் செய்யக்கூடிய அதிரடி வீரர்கள் இருந்தும் கூட, கடைசி ஓவர் போட்டியை எடுத்துச்சென்று வெறும் 142 ரன்கள் மட்டுமே அடித்து கேகேஆர் அணி தோற்றது அனைவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. 

30 பந்தில் 30 ரன் தேவை என்ற நிலையில், ரசலும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அடுத்த சில பந்துகளில் போட்டியை முடித்துவிடுவார்கள் என்று நினைத்த ரசிகர்களுக்கு பேரதர்ச்சிதான் காத்திருந்தது. வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி போட்டியை விரைவில் முடிக்காமல், எளிய இலக்கை கடைசி ஓவர் வரை எடுத்துச்சென்றதுதான், கேகேஆரின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தினேஷ் கார்த்திக் 11 பந்தில் 8 ரன் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 15 பந்தில் 9 ரன் மட்டுமே அடித்த ரசல், கடைசி ஓவரில் தான் ஆட்டமிழந்தார். ஆனாலும் அந்த அணியால் 142 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்திருந்த கேகேஆர் அணி, வெற்றியை மும்பை அணிக்கு தாரைவார்த்துவிட்டது.

இந்நிலையில், முதல் போட்டியின் வெற்றிக்கு பிறகு, வெற்றி வேட்கையுடன் ஆடப்போகிறோம் என்ற கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கனின் கூற்றை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார் சேவாக்.

கேகேஆர் அணி ஆடிய விதம் குறித்து பேசிய வீரேந்திர சேவாக், முதல் போட்டியின் வெற்றிக்கு பிறகு பேசிய ஒயின் மோர்கன், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வேட்கையுடன் ஆடப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் ரசலும் தினேஷ் கார்த்திக்கும் ஆடியபோது, அந்த வெற்றி வேட்கை தென்படவேயில்லை. கில், ராணா, மோர்கன், ராணா, ஷகிப் அல் ஹசன் ஆகியோரின் பேட்டிங்கில் வெற்றி வேட்கை தெரிந்தது. ஆனால் ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கில் அது தெரியவில்லை. அவர்கள் கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்செல்ல நினைத்தனர் என்று சேவாக் விமர்சித்தார்.
 

click me!