#IPL2021 முக்கியமான வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்.. டெல்லி கேபிடள்ஸுக்கு அடுத்த அடி

By karthikeyan VFirst Published Apr 14, 2021, 4:28 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக உள்ள நிலையில், கொரோனா நெறிமுறைகள் மிகக்கடுமையாக பின்பற்றப்பட்டு, ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் ஐபிஎல் 14வது சீசன் இந்தியாவில் நடத்தப்பட்டுவருகிறது.

ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள் சிலர், மும்பை வான்கடே மைதான ஊழியர்கள் என பலருக்கு கொரோனா உறுதியாகிவந்தாலும், ஐபிஎல்லை பாதுகாப்பான முறையில் நடத்துவது என்ற திடமான முடிவுடன் ஐபிஎல்லை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறது.

தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா ஆகிய வீரர்கள் ஐபிஎல் தொடங்குவதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு அணிக்கு திரும்பினர். இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஆடிவிட்டு இந்தியாவிற்கு வந்த ரபாடா மற்றும் நோர்க்யா ஆகிய 2 டெல்லி கேபிடள்ஸ் வீரர்களும் கொரோனா நெறிமுறைகளின் படி, குவாரண்டினில் இருந்தனர். குவாரண்டின் முடிந்து ரபாடாவுடன் இணைந்து இன்று நோர்க்யா பயிற்சியில் ஈடுபடவிருந்த நிலையில், நோர்க்யாவிற்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.

இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாத நிலையில், அக்ஸர் படேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதால் முதல் சில போட்டிகளில் ஆடமாட்டார். இந்நிலையில், அந்த அணியின் முக்கியமான ஃபாஸ்ட் பவுலரான நோர்க்யாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதனால் அவர் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். குறைந்தது 2 முறை கொரோனா நெகட்டிவ் என்று வந்தால்தான் அவரால் மீண்டும் களம் காணமுடியும். 

முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் சிஎஸ்கேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற டெல்லி அணி, நாளை(15ம் தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில், நோர்க்யா கொரோனாவால் ஆடமுடியாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவுதான்.
 

click me!