#RRvsPBKS அதிரடி சதமடித்து கடைசி பந்து வரை போராடிய சஞ்சு சாம்சன்..! கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி

By karthikeyan VFirst Published Apr 12, 2021, 11:45 PM IST
Highlights

சஞ்சு சாம்சன் அதிரடி சதமடித்து 222 ரன்கள் என்ற இலக்கை தனி ஒருவனாக போராடி கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட போதிலும், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், 14 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் அறிமுக பவுலர் சக்காரியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கெய்ல் அதிரடியாக ஆடி 40 ரன்களை அடித்த நிலையில், ரியான் பராக்கின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா, 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

3வது விக்கெட்டுக்கு ராகுலும் ஹூடாவும் இணைந்து 8 ஓவரில் 105 ரன்களை குவித்தனர். ஹூடா 28 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 91 ரன்கள் அடித்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

222 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸும் மனன் வோராவும் களமிறங்கினர். ஷமியின் முதல் ஓவரிலேயே ஸ்டோக்ஸ் ரன்னே அடிக்காமலும், மனன் வோரா 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சாம்சனுடன் இணைந்து நன்றாக ஆடிய பட்லர் 26 ரன்னில் ஜெய் ரிச்சர்ட்ஸனின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் துபேவும் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியை தொடர்ந்த சாம்சன், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ரியான் பராக் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 11 பந்தில் 25 ரன்களை அடித்து ஷமியின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருந்தாலும், மறுமுனையில் நிலைத்து அடித்து ஆடிய சஞ்சு சாம்சன், சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று போராடினார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அடிக்காத சாம்சன், 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3வது பந்தில் மோரிஸ் சிங்கிள் எடுக்க, 4வது பந்தில் சிக்ஸர் அடித்த சாம்சன், 5வது பந்தில் சிங்கிள் ஓட மறுத்தார். எனவே கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாம்சன், பந்தை தூக்கியடிக்க, அது கேட்ச் ஆனது. இதையடுத்து 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி தோற்றிருந்தாலும், சஞ்சு சாம்சன் தனிநபராக போராடியது பார்க்க அருமையாக இருந்தது. சாம்சன் 63 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 119 ரன்களை குவித்தார்.
 

click me!