முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பதெல்லாம் வேற லெவல் கான்ஃபிடென்ஸ்..! சூர்யகுமாரை பாராட்டிய சேவாக்

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 4:33 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை ஆடி, முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சூர்யகுமார் யாதவை சேவாக் பாராட்டியுள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு அந்த போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 3வது போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 4வது டி20 போட்டியில் ஆட வாய்ப்பு பெற்ற சூர்யகுமார் யாதவ், அபாரமாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்து, 31 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசி இந்திய அணி 185 ரன்களை குவிக்க உதவினார்.

அதன்பின்னர் இங்கிலாந்து அணியை 177 ரன்களில் சுருட்டி 8 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடினார். ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்ததும் 3ம் வரிசையில் சூர்யகுமார் களத்திற்கு வந்தார். சூர்யகுமார் களத்திற்கு வந்து எதிர்கொண்ட முதல் பந்தை 144 கிமீ வேகத்தில் வீசினார் ஆர்ச்சர். ஆர்ச்சர் ஷார்ட் பிட்ச் பந்தாக 144 கிமீ வேகத்தில் வீசிய அந்த பந்தை  அசால்ட்டாக ஹூக் ஷாட் மூலம் ஃபைன் லெக் திசையில் சிக்ஸருக்கு விரட்டி மிரட்டினார் சூர்யகுமார் யாதவ்.

முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சூர்யகுமாரை இங்கிலாந்து வீரர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாது, கேப்டன் விராட் கோலியும் வியந்தே பார்த்தார்.

சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததை, முதல் பந்தில் பவுண்டரியும் சிக்ஸரும் அடிப்பதற்கு பெயர்போன சேவாக்கே பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக், புதிதாக வரும் வீரர்கள் அனைவருக்கும் எனது ஆசீர்வாதம் எப்போதுமே உண்டு. சூர்யகுமார் மட்டுமல்ல; ரோஹித்தும் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். சூர்யகுமார் யாதவ் அவரது திறமையை காட்டுவதற்கான தருணத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த வாய்ப்பு கிடைத்ததும், ஐபிஎல்லில் ஆடியதை போலவே ஆடிவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுகிறோம் என்றெல்லாம் நினைக்காமல், இயல்பாக ஆடினார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தால், அதீத தன்னம்பிக்கையை கொடுக்கும்.  முதல் பந்தில் அடிக்கும் சிக்ஸர், பதற்றத்தை தணித்து என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும். அதுவும் எதிரணியின் வேகமான பவுலரையே சிக்ஸர் அடித்துவிட்டால், அந்த அணியின் எந்த பவுலரையும் தன்னால் அடிக்க முடியும் என்ற வேற லெவல் நம்பிக்கையை கொடுக்கும் என்று சேவாக் தெரிவித்தார்.
 

click me!