#INDvsENG அவரோட ஸ்டிரைக் ரேட் எப்போதுமே அதிகம் தான்..! இந்திய மேட்ச் வின்னருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம்

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 3:45 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவின் ஸ்டிரைக் ரேட் எப்போதுமே அதிகம் தான் என்றும் அவர் மேட்ச் வின்னர் என்றும் விவிஎஸ் லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி, தியோதர் டிராபி ஆகிய உள்நாட்டு தொடர்களிலும், ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், கடந்த ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் 480 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் 5வது முறையாக கோப்பையை வெல்ல உதவினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அணியில் சூர்யகுமார் இடம்பெறவில்லை. அது அவருக்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாகவும் அதிருப்தியாகவும் இருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். 2வது டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவுக்கு அந்த போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், 3வது போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 4வது டி20 போட்டியில் ஆட வாய்ப்பு பெற்ற சூர்யகுமார் யாதவ், அபாரமாக ஆடி 28 பந்தில் அரைசதம் அடித்து, 31 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களை விளாசி இந்திய அணி 185 ரன்களை குவிக்க உதவினார்.

அதன்பின்னர் இங்கிலாந்து அணியை 177 ரன்களில் சுருட்டி 8 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் தான் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அந்த போட்டியில் மிகுந்த தன்னம்பிக்கையுடன், தான் எதிர்கொண்ட, ஆர்ச்சர் 144 கிமீ வேகத்தில் வீசிய முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய சூர்யகுமார், அதே நம்பிக்கையுடன் முழு இன்னிங்ஸையும் ஆடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில், சூர்யகுமாரின் பேட்டிங்கால் கவர்ந்திழுக்கப்பட்ட விவிஎஸ் லக்‌ஷ்மண் பேசுகையில், சூர்யகுமார் ஆடியது அபாரமான பேட்டிங். அவரது மனநிலை அபரிமிதமானது. “ரொம்ப யோசிக்காமல் எளிமையாக காரியத்தை சாதிக்க வேண்டும். நிறைய சிந்தித்து குழப்பிக்கொண்டால் நமது பலத்தையும், நாம் வழக்கமாக எப்படி ஸ்கோர் செய்வோம் என்பதையும் மறந்துவிடுவோம். எனவே எளிமையாக வழக்கமான பேட்டிங்கை ஆட வேண்டும்” சூர்யகுமார் முரளி கார்த்திக்கிடம் கூறினார். இது அவரது தெளிவான மனநிலையை காட்டுகிறது என்று லக்‌ஷ்மண் தெரிவித்தார்.

ஃபீல்டர்கள் நிற்பதை கவனித்துவிட்டு, அதற்கேற்ப கிரியேட்டிவாக ஷாட்டுகளை ஆடுகிறார். ஸ்பின்னர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்கள் என இருதரப்பையும் நன்றாக ஆடுகிறார். அவரது ஸ்டிரைக் ரேட் எப்போதுமே அதிகமாயிருக்கிறது. அவர் ஒரு மேட்ச் வின்னர் என்று லக்‌ஷ்மண் புகழாரம் சூட்டினார்.
 

click me!