
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என தொடர்ச்சியாக இருபெரும் டி20 தொடர்களில் இந்திய அணி தோல்வியை தழுவியதையடுத்து, இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம், இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
இந்திய அணியில் சில சீனியர் வீரர்களின் இடங்களும் கேள்விக்குறியாகியுள்ளன. ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியை தழுவியதால் ஃபைனலுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது இந்திய அணி. டி20 உலக கோப்பையிலாவது சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா, ஜடேஜா ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ரோஹித் சர்மாவின் டி20 கேப்டன்சி காலி..? அவங்க 2 பேரில் ஒருவர் அடுத்த கேப்டன்..?
ஆனால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும், கேப்டனான பிறகு அவரது பேட்டிங்கும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட சோபிக்கவில்லை. அவரது ஓபனிங் பார்ட்னரான ராகுல் ஒன்றிரண்டு அரைசதங்கள் அடித்தாலும், அவரது இன்னிங்ஸ் அணிக்கு உதவவில்லை. ஆட்டத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில் அல்லது முக்கியமான ஆட்டத்தில் உதவும் வகையில் இல்லை.
டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரே 46 ரன்கள். அதுவும் நெதர்லாந்துக்கு எதிராக அடித்தது. அந்தளவிற்கு பவர்ப்ளேயில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்திருக்கிறது. இந்திய அணி தோற்றுப்போனதற்கு பவர்ப்ளேயில் அதிரடியான தொடக்கம் அமையாததும் அதனால் போதுமான ஸ்கோரை அடிக்க முடியாததும் தான் காரணம். அரையிறுதியில் தோற்று வெளியேறியதற்கும் அதுவே காரணம்.
இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில் என இளம் வீரர்கள் பலர் வரிசைகட்டி நிற்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
இந்நிலையில், மேற்கூறிய இளம் வீரர்களுக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்த ஒரு இளம் வீரரை மீண்டும் இந்திய அணிக்குள் எடுத்துவர வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அந்த வீரர் பிரித்வி ஷா.
2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணியில் இடம்பிடித்த பிரித்வி ஷா காயமடந்து அந்த தொடரிலிருந்து விலகினார். அதன்பின்னர் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து அறிமுக இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்த பிரித்வி ஷா, 5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் ஆடியுள்ளார்.
ஆனால் அவ்வப்போது ஃபிட்னெஸ் பிரச்னையால் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்த பிரித்வி ஷா அப்படியே அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் டி20, ஒருநாள் போட்டிகளில் அபாரமாக பேட்டிங் ஆடி மலை மலையாக ஸ்கோரை குவித்துவருகிறார் பிரித்வி ஷா. அண்மையில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் கூட 152 ஸ்டிரைக் ரேட்டில்தொடர் முழுக்க பேட்டிங் ஆடி மும்பைஅணி கோப்பையை வெல்ல உதவினார்.
இந்நிலையில், பிரித்வி ஷாவை மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஆடவைக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், ஒரு வீரரை நான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் பார்க்க விரும்புகிறேன் என்றால் அது பிரித்வி ஷா தான். டெஸ்ட் அணியிலும் நீண்டகாலமாக பிரித்வி ஷா இல்லை. அவரை மீண்டும் இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன். 2023 ஒருநாள் உலக கோப்பைக்கான அணியில் பிரித்வி ஷா இருப்பார் என நம்புகிறேன். பிரித்வி ஷா 150 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார். டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ற வீரர் பிரித்வி ஷா என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.