
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 2017லிருந்து முதன்மை ஸ்பின்னராக ஆடிவந்தவர் யுஸ்வேந்திர சாஹல். விராட் கோலி இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனானதும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதனால் குல்தீப்பும் சாஹலும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்து ஆடினர். ஆனால் 2019 உலக கோப்பையில் அவர்களது பவுலிங் பெரியளவில் எடுபடாததையடுத்து, அதன்பின்னர் இருவரும் ஒருசேர இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்கள் ஐபிஎல்லில் தொடர்ந்து அசத்தலாக பந்துவீசியதுடன், இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்தி கொண்டனர். அதேவேளையில், சாஹலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
ஆனாலும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா, ராகுல் சாஹர், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி ஆகிய 5 ஸ்பின்னர்கள் எடுக்கப்பட்டபோதிலும், கோலியின் ஆஸ்தான ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் அணியில் எடுக்கப்படவில்லை. அஷ்வின் 4 ஆண்டுகளுக்கு பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.
ரிஸ்ட் ஸ்பின்னரான சாஹலை தலையில் தூக்கிவைத்து கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடினார் கேப்டன் கோலி. கோலியின் ஆஸ்தான ஸ்பின்னராகவும் திகழ்ந்த சாஹல், டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அருமையாக பந்துவீசிய சாஹல், 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார்.
இந்நிலையில், சாஹலை டி20 உலக கோப்பை அணியில் புறக்கணித்தது குறித்து பேசியுள்ள சேவாக், சாஹல் இப்போது மட்டுமல்ல; கடந்த காலங்களிலும் சிறப்பாகவே ஆடியிருக்கிறார். டி20 உலக கோப்பை அணியில் சாஹலை எடுக்காதது ஏன் என என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. தேர்வாளர்கள் கண்டிப்பாக விளக்கமளிக்க வேண்டும். ராகுல் சாஹர் இலங்கையில் அவ்வளவு பிரமாதமாக பந்துவீசவில்லை. சாஹல் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து என்று சேவாக் தெரிவித்தார்.