#ICCWTC ஃபைனல்: எப்படி பேட்டிங் ஆட வேண்டும்..? ரோஹித் சர்மாவிற்கு சேவாக் அறிவுரை

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 4:36 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று ரோஹித் சர்மாவிற்கு வீரேந்திர சேவாக் ஆலோசனை கூறியுள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி ஆகிய இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங்கில் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும். 

இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய சீனியர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியாக வேண்டும். பின்வரிசையில் ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி முக்கியமான ரன்களை விரைவாக குவித்துக்கொடுக்க வல்லவர். ஆனால் ரோஹித்தும் கோலியும் சிறப்பாக ஆடுவது அவசியம். குறிப்பாக தொடக்க வீரர் ரோஹித் சர்மா தான் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும்.

அந்தவகையில், ரோஹித் சர்மா முக்கியமான வீரர். இந்நிலையில், இங்கிலாந்து கண்டிஷனில் ரோஹித் சர்மா எப்படி ஆட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வீரேந்திர சேவாக், நான் இங்கிலாந்தில் முதல் முறையாக ஓபனிங் செய்தபோது, அடித்து ஆடவில்லை. நிதானமாகத்தான் தொடங்கினேன். 150-160 பந்துகளில் தான் சதமே அடித்தேன். ஸ்விங் கண்டிஷனில் புதிய பந்தில் ஆடும்போது கண்டிஷனுக்கு மதிப்பளித்து ஆடியதால் தான் என்னால் சாதிக்க முடிந்தது. ஃப்ளாட்டான விக்கெட்டில் பந்து ஸ்விங் ஆகாது. பசுமையான புற்கள் நிறைந்த ஆடுகளங்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். எனவே 2 விதமான ஆடுகளங்களும் வித்தியாசமானது.

இங்கிலாந்தை பொறுத்தமட்டில் கண்டிஷன் தான் எல்லாமே. மேகமாக இருந்தால் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். கொஞ்சம் வெயிலாக இருந்தால் நன்றாக பேட்டிங் ஆடலாம். எனவே கண்டிஷனுக்கு மதிப்பளித்து பொறுமையாக ஆடவேண்டும். மோசமான பந்துக்காக காத்திருக்க வேண்டும். ரோஹித் இங்கிலாந்தில் ஆடிய அனுபவம் கொண்டவர். அவருக்கு என்னுடைய அறிவுரை எல்லாம், புதிய பந்திற்கு மதிப்பளித்து பொறுமையாக ஆட வேண்டும். அவசரப்படாமல் பொறுமையாக ஆடினாலே, தவறான பந்து கிடைக்கும். அதை அடித்து ஆட வேண்டும். முதல் 10 ஓவர்களில் நிதானமாக ஆடிவிட்டு, நன்றாக செட்டில் ஆனபின்னர், அடித்து ஆடலாம் என்று சேவாக் அறிவுரை கூறியுள்ளார்.
 

click me!