
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த 9ம் தேதி முதல் எஞ்சிய போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டுவருகின்றன.
நேற்றைய போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குவெட்டா அணி 20 ஓவரில் வெறும் 133 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக வெதரால்டு 43 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே அந்தளவிற்குக்கூட ஆடவில்லை. அதனால் குவெட்டா அணி 133 ரன்களுக்கு சுருண்டது.
134 ரன்கள் என்ற எளிய இலக்கை இஸ்லாமாபாத் அணி விக்கெட் இழப்பின்றி அடித்து ஜெயித்துவிட்டது. இஸ்லாமாபாத் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ காட்டடி அடித்தார். ஆரம்பம் முதலே அடித்து ஆடிய அவர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி தள்ளினார்.
அதிரடியாக ஆடிய காலின் முன்ரோ 36 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 90 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து உஸ்மான் கவாஜாவும் சிறப்பாக ஆடி 41 ரன்களை அடிக்க, 10 ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இஸ்லாமாபாத் அணி.