#WIvsSA குயிண்டன் டி காக் அபார சதம்.. இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா..!

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 2:11 PM IST
Highlights

தென்னாப்பிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்திலான தோல்வியின் விளிம்பில் உள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.
 

வெஸ்ட் இண்டீஸ் -  தென்னாப்பிரிக்கா இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் செயிண்ட் லூசியாவில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 97 ரன்களுக்கு சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷாய் ஹோப், க்ரைக் பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ், பிளாக்வுட், ஹோல்டர் என அனைத்து வீரர்களுமே மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததையடுத்து, 97 ரன்களுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக லுங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும், அன்ரிக் நோர்க்யா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டீன் எல்கர் ரன்னே அடிக்காமல் ஏமாற்றமளித்தாலும், மற்றொரு தொடக்க வீரரான மார்க்ரம் சிறப்பாக ஆடி 60 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் நன்றாக ஆடிய வாண்டர்டசனும் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ஆனால் குயிண்டன் டி காக் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்தார். வாண்டர்டசன் ஆட்டமிழந்த பிறகு, முல்டர் டி காக்குடன் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். ஆனால் அவரும் 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மஹராஜ், ரபாடா, இங்கிடி, நோர்க்யா ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதமடித்த டி காக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்களை குவிக்க, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 322 ரன்களை குவித்தது. 

225 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் அடித்துள்ளது. இந்த இன்னிங்ஸிலும் ஷாய் ஹோப்(12), க்ரைக் பிராத்வெயிட்(7), கீரன் பவல்(14), கைல் மேயர்ஸ்(12) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் ரோஸ்டன் சேஸ் 21 ரன்களுடனும் பிளாக்வுட் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னும் 143 ரன்கள் பின் தங்கியிருப்பதால், தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தாக்குப்பிடித்து போராடினாலும் கூட, தென்னாப்பிரிக்காவிடமிருந்து இனி வெற்றியை பறிக்க முடியாது. தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதியாகிவிட்டது.
 

click me!