சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி! அசைக்க முடியாத இடத்தில் சச்சின்

By karthikeyan VFirst Published Sep 26, 2022, 4:50 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 63 ரன்களை குவித்த விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், 2019 நவம்பருக்கு பின் சுமார் 3 ஆண்டுகள் சதமே அடிக்காததால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு கம்பேக் சதமடித்து அசத்தினார். அது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 71வது சதமாக இருந்தாலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது முதல் சதமாகும்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யாருக்கு ஆடும்லெவனில் இடம்? விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன் ரோஹித்

சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்களை விளாசியதன் மூலம் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கின் (71 சதம்) சாதனையை சமன் செய்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இரண்டாம் இடத்தை பாண்டிங்குடன் பகிர்ந்தார். இன்னும் ஒரு சதம் அடித்தால் பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துவிடுவார்.

அந்த சதத்தின் மூலம் சாதனை பயணத்தை மீண்டும் தொடங்கிய விராட் கோலி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் 2 அரைசதங்கள் அடித்தார். 3வது டி20 போட்டியில் 48 பந்தில் 63 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த போட்டியில் அடித்த ரன்களின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடத்தை பிடித்தார்.

1996ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடிய ராகுல் டிராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் 504 போட்டிகளில் 24,064 ரன்களை குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக ரன்களை குவித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் தன்வசம் வைத்திருந்தார். 

விராட் கோலி ஆஸி.,க்கு எதிராக அடித்த 63 ரன்களுடன் சேர்த்து 24,078 ரன்களை குவித்து, ராகுல் டிராவிட் சாதனையை முறியடித்து சச்சினுக்கு அடுத்து 2வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 34357 ரன்களுடன் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க - டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் சாதனையை முறியடித்து, இனி வேறு அணி முறியடிக்க முடியாத சாதனையை படைத்த இந்தியா

இந்திய அளவில் 2வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, சர்வதேச அளவில் 6ம் இடத்தில் உள்ளார். முதல் 5 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா, ரிக்கி பாண்டிங், மஹேலா ஜெயவர்தனே மற்றும் ஜாக் காலிஸ் ஆகிய ஐவரும் உள்ளனர். இவர்களில் சச்சினை தவிர மற்ற 4 பேரையும் விராட் கோலி எளிதாக முந்திவிடுவார். சச்சினை முந்துவது கடினம். முதலிடத்தில் இருக்கும் சச்சினுக்கும், 2ம் இடத்தில் இருக்கும் சங்கக்கராவுக்கும் இடையேயான இடைவெளி சுமார் 6000 ரன்கள். எனவே சச்சின் சாதனையை முறியடிப்பது சற்று கடினமே.
 

click me!