நீங்களே என்னை பாராட்டிட்டீங்களே.. ரொம்ப நன்றி பிக் பாஸ்.. விராட் கோலி நெகிழ்ச்சி

By karthikeyan VFirst Published Dec 8, 2019, 1:00 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது அபாரமான பேட்டிங்கை பார்த்து, ஒற்றை வார்த்தையில் தன்னை வெகுவாக பாராட்டிய லெஜண்ட் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ஸுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறார். தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது எதிரணி வீரர்களையும் தனது திறமைக்கு அடிமையாக்கியுள்ளார் என்று கூறினால் மிகையாகாது. அந்தளவிற்கு சமகால கிரிக்கெட்டில் அவர் கூடவும், அவருக்கு எதிராக எதிரணியிலும் ஆடும் எத்தனையோ வீரர்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, அவரை ரோல் மாடலாக நினைக்கின்றனர். 

ஒவ்வொரு போட்டியிலும் தனது அபாரமான பேட்டிங்கின் மூலம் முத்திரையை பதிப்பதுடன், அணிக்கும் வெற்றிகளை குவித்து கொடுத்துவரும் விராட் கோலி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அத்தியாயம். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவரது பேட்டிங் வேற லெவலில் இருந்தது. 

ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 208 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்துவிட்டது. அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் கோலி, அதிரடியாக ஆடி மளமளவென ஸ்கோர் செய்தார். கேஎல் ராகுலுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து நொறுக்கினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர். ராகுல் 40 பந்தில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பு முழுவதையும் தனது தோள்களில் சுமந்த விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை சல்லி சல்லியாக நொறுக்கினார். 

வழக்கமாக பவுண்டரிகளை அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் பவுண்டரிகளுக்கு நிகராக சிக்ஸர்களையும் விளாசினார். 50 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 94 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். வழக்கமான தனது நேர்த்தியான ஷாட்டுகளின் மூலம் பந்துகளை பறக்கவிட்ட கோலி, சிக்ஸர்களை அசால்ட்டாக அடித்து சிக்ஸர் மழை பொழிந்தார். மிட் விக்கெட், எக்ஸ்ட்ரா கவர், லாங் ஆன் என அடித்து நொறுக்கினார். 

94 ரன்களை குவித்த விராட் கோலி, டி20 கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். அதேபோல 23 அரைசதங்களுடன் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை 12 ஆட்டநாயகன் விருதுகளுடன், அதிகமுறை டி20 கிரிக்கெட்டில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு, ஒவ்வொரு போட்டியிலும் தான் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டே இருக்கிறார் கோலி என்று புகழாரம் சூட்டினார். 

விராட் கோலியை விவியன் ரிச்சர்ட்ஸ் முதல் விவிஎஸ் லட்சுமணன் வரை பலர் புகழ்ந்து தள்ளியுள்ளனர். கோலியின் பேட்டிங்கை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் டுவிட்டரில், Amazing. Just amazing என புகழ்ந்தார். இதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அந்தளவிற்கு பிரமிக்க வைக்கும் அபாரமான பேட்டிங், என்கிற ரீதியில் விவியன் ரிச்சர்ட்ஸ் புகழ்ந்திருந்தார்.

Amazing. Just amazing,

— Sir Vivian Richards (@ivivianrichards)

லெஜண்ட் பேட்ஸ்மேனான விவியன் ரிச்சர்ட்ஸே தன்னை புகழ்ந்ததால் மிகுந்த மகிழ்ச்சியடைந்த விராட் கோலி, விவியன் ரிச்சர்ட்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நன்றி பிக் பாஸ்.. நீங்களே வாழ்த்துகிறீர்கள் என்றால், அது பெரிய விஷயம் என்று டுவீட் செய்துள்ளார். 

Thanks big BOSS. Coming from you means a lot 🙏🏼

— Virat Kohli (@imVkohli)
click me!