
Virat Kohli: நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி, பெங்களூரு அணிகள் மோதிக் கொண்டன. டாஸ் வென்ற பெங்களூரு (RCB) அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி பேட்டிங் செய்ய வந்த டெல்லி அணி வீரர்கள் பெங்களூரு பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.
KL ராகுல் நிதான ஆட்டம்
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 41 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோரை பதிவு செய்யத் தவறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. சிறப்பாக பந்து வீசிய பெங்களூரு வீரர் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
க்ருணால் பாண்டியா அதிரடி ஆட்டம்
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு தொடக்க வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் 47 பந்துகளை எதிர் கொண்டு 4 பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களம் இறங்கிய க்ருணால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 47 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரி, 4 சிக்சர் உட்படி 73 ரன்கள் விளாசினார். இறுதியில் பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளி பட்டியலில் முதல் இடம்
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. இதனிடையே போட்டியின் முடிவில் தோல்விக்கான காரணம் குறித்து சக வீரர்களுடன் கே.எல்.ராகுல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விராட் கோலி மைதானத்தில் வட்டமிட்டு காந்தாரா பட பாணியில் இது என்னுடைய மைதானம் என்று நகைச்சுவையுடன் கூறினார்.
முன்னதாக சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் வெறும் 53 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 164 ரன்களை சேஸ் செய்து வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியின் போது ராகுல் தனது பேட்டிங்கின் இடையே மைதானத்தில் தனது பேட்டால் வட்டமிட்டு இது எனது கேம் என்ற தொணியில் தனது உணர்வை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.