IND vs NZ தேர்டு அம்பயரின் தவறால் மோசமான சாதனை பட்டியலில் இணைந்த விராட் கோலி..!

By karthikeyan VFirst Published Dec 3, 2021, 3:49 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் தேர்டு அம்பயரின் தவறான முடிவால், டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்தார் விராட் கோலி.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. மைதானம் ஈரமாக இருந்ததால் முதல் செசன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. 11.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 12 மணிக்கு ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. விராட் கோலி அணிக்குள் வந்ததால் அஜிங்க்யா ரஹானே நீக்கப்பட்டார். ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவும், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜும் அணியில் சேர்க்கப்பட்டார்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். ஷுப்மன் கில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை வீழ்த்திய அஜாஸ் படேல், தனது அடுத்த ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். இன்னிங்ஸின் 30வது ஓவரை வீசிய அஜாஸ் படேல், அந்த ஓவரின் 2வது பந்தில் புஜாராவையும் கடைசி பந்தில் கோலியையும் வீழ்த்தினார்.

80 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, அதே 80 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் விராட் கோலி அவுட்டே இல்லை. தேர்டு அம்பயர் தவறாக அவுட் கொடுத்துவிட்டார். 

அஜாஸ் படேல் வீசிய அந்த பந்தில் கோலிக்கு கள நடுவர் எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார். ஆனால் மிகுந்த நம்பிக்கையுடன் உடனடியாக ரிவியூ செய்தார் விராட்கோலி. அதை நீண்ட நேரம் ஆய்வு செய்த தேர்டு அம்பயர் வீரேந்தர் ஷர்மா அவுட் கொடுத்தார். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்ட பின்னர் தான் கால்காப்பில் பட்டது என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அதற்கு அம்பயர் தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டார். 

அம்பயரின் தவறான முடிவால் டக் அவுட்டான விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் மட்டும் 4 முறை டக் அவுட்டாகியுள்ளார் விராட் கோலி. இதன்மூலம், ஓராண்டில் டெஸ்ட்கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான இந்திய கேப்டன்கள் பட்டியலில் பிஷன் பேடி (1976 - 4 முறை), கபில் தேவ் (1983 - 4 முறை) மற்றும் தோனி (2011 - 4 முறை) ஆகிய மூவரையும் சமன் செய்துள்ளார் விராட் கோலி. 

இந்த ஆண்டில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. அதில் இன்னும் ஒருமுறை டக் அவுட்டானால், கோலி முதலிடம் பிடித்துவிடுவார். 
 

click me!